Published : 27 Nov 2014 08:40 AM
Last Updated : 27 Nov 2014 08:40 AM

பறவைக் காய்ச்சல் நோய் தீவிரம் எதிரொலி: கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டுவர திடீர் தடை

கேரளாவில் பறவைக்காய்ச்சல் நோய் தீவிரமாக பரவியுள்ளதால் அங்கிருந்து கோழி, வாத்து, முட்டை மற்றும் அதன் சார்புப் பொருட்களை தமிழகத்துக்குள் கொண்டு வர அரசு தடை விதித்துள்ளது. எல்லையோர சோதனைச் சாவடிகளில் வாகனங்களை கண்காணிக்க 800 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.

கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கடந்த சில நாட் களில் சுமார் 17 ஆயிரம் வாத்துகள் இறந்தன. இவற்றின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பப்பட்டது. பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டு வாத்துகள் இறந்ததை மத்திய அரசு உறுதி செய்து, அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் விஜயகுமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

கேரளாவில் இருந்து பறவைகளை தமிழகத்துக்கு கொண்டுவர தடை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. இதுபற்றி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் நோய் எதுவும் இல்லை. என்றாலும், இந்நோய் எளிதில் பரவக்கூடியது என்பதால், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழிகள் மற்றும் கோழியினம் சம்பந்தப்பட்ட பொருட்களை மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மூலம், சோதனை செய்து தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்ப வேண்டும். கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களையும் மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் நிறுத்தி, அவற்றின்மீது கிருமி நாசினி தெளிக்க வேண்டியது அவசியமாகும். மண்டல இணை இயக்குநர்கள், சோதனைச் சாவடிகளில் இப்பணிக்கான குழுக்களை தயார் நிலையில் வைத்திருப்பர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களிலும், குறிப்பாக கேரள எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்புப் பணி மேற்கொள் ளப்படும். நோய்த் தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள 800 விரைவு செயலாக்கக் குழுக்கள் அமைக் கப்படும். சைதாப்பேட்டை மத்திய நோய் ஆய்வுக் கூடத்தில், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.

இதன் தொலைபேசி எண். 044 24339097. அலைபேசி எண். 9445032504.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x