Published : 17 Apr 2017 08:00 AM
Last Updated : 17 Apr 2017 08:00 AM

கும்மிடிப்பூண்டியில் இணைப்பு சாலை மூடல்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வரைபடத்துடன் விளக்கம் அளிக்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கும்மிடிப்பூண்டியில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் இணைப்புச் சாலையை அதிகாரிகள் மூடியது குறித்து வரைபடத்துடன் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை கும்மிடிப்பூண்டி வழியாக செல்கிறது. இந்த வழித்தடத்தில் மாநில நெடுஞ்சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் ஒருபகுதி இணைப்புச் சாலையை அதிகாரிகள் திடீரென மூடியுள்ளனர். இப்பகுதியில் பாரத் பெட்ரோலியம் சார்பில் அமைக்கப்படும் பெட்ரோல் பங்க்குக்காக இந்த இணைப்புச் சாலை மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 7 மீட்டர் அகலமுள்ள குறுகலான பாதையில் சுமார் 5 கி.மீ. தொலைவு சுற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லவேண்டி உள்ளது. இதனால், இந்த வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவுக்கு திரவ நைட்ரஜன் கொண்டுசெல்லும் கனரக டேங்கர் லாரிகளும் இந்த வழியாகவே செல்வதால் விபத்து அபாயமும் உள்ளது. பெட்ரோல் பங்க் அமைப்பதற்காக இணைப்புச் சாலையை மூடி வாகன ஓட்டிகளை சிரமப்படுத்தக் கூடாது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆஜராகி, ‘‘உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பெட்ரோல் பங்க் அமைக்கப்படுமானால், அதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதேநேரம், தனியார் பலன் பெறுவதற்காக கட்டப்படும் பங்க்குக்காக பொது மக்களை சிரமப்படுத்துவது நியாயம் அல்ல. விதிமுறைகளை மீறி அந்த பங்க்குக்கு அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. எனவே, இணைப்புச் சாலையை திறக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை கள் துறை அமைச்சகத்தின் சென்னை மண்டல அதிகாரி, மூடப்பட்ட கும்மிடிப்பூண்டி இணைப்புச் சாலையின் வரைபடத்தோடு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், பாரத் பெட்ரோலியம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தரப்பிலும் 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x