

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் இரவு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு அளித்த பேட்டி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி திரிபாதியும் அதிகாரிகளுக்கு ஆலோசனை களை வழங்கியுள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும் அரசியல் நிகழ்வுகள், தலைவர்களுக்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள், போராட்டம் நடத்துபவர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர். இவை உடனுக் குடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கவனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டு வருகிறது. பணி ஒதுக்கப் பட்டுள்ள போலீஸார் மட்டுமின்றி அனைத்து போலீஸாரும் தயார் நிலையில் இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், நேற்று உயர் போலீஸ் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினர். அனைத்து அரசியல் நகர்வுகள், பொதுமக்களின் கருத்துகள், தலைவர்களுக்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளை உடனுக்குடன் தெரிவிக்கும்படி போலீஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களின் செல்போன் தகவல் களும் சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.