Published : 13 Jun 2016 08:17 AM
Last Updated : 13 Jun 2016 08:17 AM

வேலை செய்த வீட்டிலேயே 87 பவுன் நகை, ரூ.15 லட்சம் திருடிய பிஹார் இளைஞர்கள் 6 பேர் கைது

தி.நகரில் தொழில் அதிபர் வீட்டில் நகை, பணம் திருடிய பிஹார் இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தி.நகர் தணிகாசலம் தெருவில் வசிப்பவர் அசோக்குமார். கட்டுமான நிறுவனம் வைத்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி இவர் குடும்பத்தினருடன் புதுவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. 87 பவுன் தங்க நகைகள், 2 வைர நெக்லஸ், ரூ.15 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தன.

அசோக்குமாரின் வீட்டில் பிஹாரைச் சேர்ந்த மோகன்ராய் என்பவர் சமையல் வேலை செய்து வந்தார். திருட்டு சம்பவம் நடந்த நாளில் இருந்து அவரையும் காணவில்லை. இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் அசோக்குமார் புகார் கொடுத்தார்.

திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க கோடம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விவேகானந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சமையல்காரர் மோகன்ராயின் வீடு பிஹார் மாநிலம் மதுபானி மாவட்டம் தர்பங்கா என்கிற பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்தபோது மோகன்வர் அங்கு இல்லை.

வீட்டில் இருந்த மோகன்ராயின் தம்பி லலன்ராய் போலீஸில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், மோகன்ராய், தனது தம்பிகள் லலன்ராய், பவன்ராய் மற்றும் பிஹாரைச் சேர்ந்த சந்தோஷ் குமார், ரகுவீர், மனோஜ், நகுல், கரண் ஆகிய 5 பேர் கூட்டாக சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. கும்பல் தலைவனாக மனோஜ் இருந்திருக்கிறார்.

அசோக்குமார் வெளியூர் சென்ற தகவலை மனோஜிடம் மோகன்ராய் சொல்ல, மோகன்ராய், மனோஜ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சேர்ந்து வந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். திருடிய பணம், நகைகளை பங்கு போட்டு பிரித்துள்ளனர். பின்னர் அனைவரும் ரயில் மூலம் பிஹாருக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

தனிப்படை போலீஸார் பிஹாரில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி, சந்தோஷ் குமார், ரகுவீர், மனோஜ், நகுல், கரண், லலன்ராய் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தலைமறைவாக இருக்கும் மோகன்ராய், அவரது தம்பி பவன்ராய் ஆகியோரை போலீஸார் பிஹாரில் முகாமிட்டு தேடிவருகின்றனர்.

திருட்டு கும்பல் தலைவனாக செயல்பட்ட மனோஜ் மீது தமிழகம், டெல்லி, மும்பை, ஜெய்பூர், ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x