Published : 18 Jan 2014 12:26 PM
Last Updated : 18 Jan 2014 12:26 PM

‘கூட்டணி குறித்து குலாம் நபி ஆசாத் பேசவில்லை: திமுக தலைவர் கருணாநிதி பேட்டி

சென்னைக்கு வந்த குலாம் நபி ஆசாத் கூட்டணி பற்றி பேசவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை இரவு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஒன்பதிலிருந்து 12 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறதே?

அது மக்களுக்கு நல்லது தானே?

மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அழகிரியின் ஆதரவாளர்கள், தாங்கள் ஒட்டவில்லை என்று கூறியிருக்கிறார்களே?

என்ன போஸ்டர் என்று எனக்குத் தெரியாது.

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசில் திமுக பல ஆண்டுகளாக அங்கம் வகித்தும்கூட தமிழ்நாட்டுக்காக எதுவும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?

மத்திய அரசில் திமுக பொறுப் பேற்றிருந்த கால கட்டத்தில் தமிழகம் என்னென்ன பயன்களைப் பெற்றிருக்கிறது என்பது பற்றி, விரிவாக இப்போதுதான் முரசொலி பத்திரிகைக்காக எழுதிக் கொடுத்துவிட்டு வருகிறேன். வெள்ளிக்கிழமை காலையில் அது முரசொலியில் வெளிவரும்.

மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் உங்களைச் சந்தித்தபோது கூட்டணி பற்றி பேசப்பட்டதா? என்ன அடிப்படையில் அவர் உங்களைச் சந்தித்தார்?

நட்பு அடிப்படையில்தான் சந்தித்தார். அவர் எப்போது இங்கே வந்தாலும் என்னைச் சந்திப்பார். வேலூரில் ஒரு விழாவுக்காக வந்தவர் திரும்பிச் செல்லும் வழியில் என்னைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

அவரிடம் இனி காங்கிரசுடன் திமுக கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாகக் கூறி விட்டீர்களா?

அவர் அதைப் பற்றி பேசவில்லை. நானும் பேசவில்லை.

மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் நிற்பது போக, எஞ்சியுள்ள ஓர் இடத்தைப் பற்றி வேறு கட்சியுடன் பேசியிருக்கிறீர்களா?

அதைப் பற்றி இன்னும் எந்த கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. திமுகவைப் பொறுத்த வரையில், காலியான இடத்துக்கு ஒருவரை நிறுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அவருடைய பெயர் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் (இந்தப் பேட்டி அளித்த சிறிது நேரத்தில் திருச்சி சிவா எம்.பி. பெயர் அறிவிக்கப்பட்டது).

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x