Published : 06 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jan 2014 12:00 AM

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக வெற்றி வாய்ப்பு: பிறந்தநாளன்று கனிமொழி எம்.பி.பேட்டி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு மிக நன்றாக இருக்கும் என்று நம்புவதாக தி.மு.க. எம்.பி., கனிமொழி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பி.,யுமான கவிஞர் கனிமொழி ஞாயிற்றுக்கிழமை தனது 46வது பிறந்த நாளை கொண்டாடினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி சி.ஐ.டி. காலனி வீட்டுக்கு சென்று, கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், குடும்பத்தினருடன் கனிமொழி ‘கேக்’ வெட்டினார். கனிமொழியின் கணவர் அரவிந்த் மற்றும் அமிர்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்றதால், அவர் சனிக்கிழமை மாலையிலேயே கனிமொழியை சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்துக் கூறி, சால்வை அணிவித்தார்.

பிறந்தநாள் விழாவின்போது, பத்திரிகையாளர்களின் கேள்வி களுக்கு கனிமொழி அளித்த பதில்கள் வருமாறு:

தமிழகத்திலிருந்து ஒருவர் நாட்டுக்கு தலைமை ஏற்கும் காலம் கனிந்திருக்கிறது என்று, ஜெயலலிதாவை முன்னிறுத்தி, அ.தி.மு.கவின் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதே?

கனவுகள் காணும் உரிமை அனைவருக்கும் உள்ளது. ஆனால், அந்த கனவை நன வாக்கும் தகுதி உள்ளதா என்பது தான் முக்கியம். தற்போதைய ஆட்சியில் தமிழகம் படும் பாட்டை அனைத்து மக்களும் அறிவர். எனவே, இந்தியாவையாவது காப்பாற்ற வேண்டும்.

வரும் தேர்தலில் தி.மு.க. வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

வெற்றி வாய்ப்பு மிகவும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

தி.மு.க. வின் கூட்டணி முடிவாகி விட்டதா?

கூட்டணி குறித்து, தலைவர் முடிவெடுத்து நல்ல செய்தியை அறிவிப்பார்

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராஜா, ஜெகத்ரட்சகன், பழனி மாணிக்கம் உட்பட பலர் கனிமொழியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தொலைபேசி மூலம் வாழ்த்து கூறினார்.

கனிமொழி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ரத்ததான வாகனத்தில், ஏராளமான பிரமுகர்கள் ரத்ததானம் வழங்கினர். கனிமொழியின் பிறந்த நாளையொட்டி, சென்னை நகரம் முழுவதும் வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில், ஸ்டாலின் படத்துடனும், அதேநேரம் அழகிரி படத்துடனும் கனிமொழி இருப்பது போன்ற சுவரொட்டிகளும் ஒட்டப் பட்டிருந்தன.

அழகிரி புறக்கணிப்பு

மதுரை தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, கடந்த இரு தினங்களாக சென்னையில்தான் தங்கியுள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மதுரையில், அவரது ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கனிமொழியின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழகிரி வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x