Published : 16 Jan 2017 10:02 AM
Last Updated : 16 Jan 2017 10:02 AM

பகவத் கீதை வகுப்பெடுக்கும் இஸ்லாமிய இளைஞர்: 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்துள்ளதாக நெகிழ்ச்சி

பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறியை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பரப்புரை செய்து வருகிறார், கேரள மாநிலம் கொச்சினைச் சேர்ந்த வாழும் கலை மைய தேசிய யோகா ஆசிரியர் ஸ்ரீசஜி யூசூப் நிஸான்.

வாழும் கலை மையம் ஏற்பாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ‘பகவத்கீதை காட்டும் வாழ்வியல் நெறி’ எனும் கருத்து பயிற்சி நடைபெறுகிறது. கொச்சினைச் சேர்ந்த தேசிய யோகா ஆசிரியர் ஸ்ரீசஜி யூசூப் நிஸான் பயிற்சி அளிக்கிறார். இஸ்லாமியரான இவர், பகவத் கீதை குறித்து பயிற்சி எடுப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து ஸ்ரீசஜி யூசூப் நிஸான் கூறும்போது, “எனது சகோதரர் ஒருவர் சொந்த பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சியில் என் தாயார் மில்லும்மா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். குடும்பத்தில் ஒரே சோகம்.

அப்போது வாழும் கலை மையத்தின் யோகா, தியான பயிற்சிகள் குறித்து தெரியவந்தது. மன ஆறுதலுக்காக என் தாயார் அங்கு சென்றார். பயிற்சியின் நிறைவில் எனது தாயாரால் தன்னிச்சையாக நடக்க முடிந்தது. தொடர்ந்து யோகாவில் பல படிநிலைகளையும் கற்று ஆசிரியர் ஆனார்.

அவர் உடல், மனதளவில் ஏற்பட்ட மாற்றம் என்னையும் யோகா ஆசிரியராக ஆக்கியது. தேசிய ஆசிரியரான நான், உலகில் 23 நாடுகளுக்கு சென்று பயிற்சி கொடுத்துள்ளேன். பிரதமர் மோடியின் முயற்சியால் யோகா தினம் மலர்ந்ததற்கு பின் உலக அளவில் யோகா கலைக்கு அதிக முக்கியத்துவமும், மரியாதையும் கிடைத்துள்ளது.

கீதை தந்த உத்வேகம்

ஒரு முறை யோகா வகுப்பு எடுத்துவிட்டு, நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். அங்குதான் முதன்முதலில் பகவத்கீதை படித்தேன். அதுவரை கீதை இந்துக்களுக்கானது என்றும், வயோதிகர்கள் தம் கடைசிக் காலத்தில் படிக்க வேண்டியது என்றும்தான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த எண்ணம் வாசிப்பின் முடிவில் தவிடுபொடியானது. பகவத்கீதை வாழ்வு முடியலுக்கானது அல்ல. தொடக்கத்துக்கே அவசியமானது என அப்போதுதான் தெரிந்தது.

தொடர்ந்து பெங்களூரு ஆசிரமத்துக்கு செல்லும்போதெல்லாம் வாழும் கலை மையத்தின் குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜியின் பகவத்கீதை உரைகளை கேட்டேன். அது எனக்கு இன்னும் அதிக உத்வேகத்தை தந்தது.

கேரளாவில் 16 மாவட்டங்களில் மும்மதத்தினருக்கும் பகவத் கீதை வகுப்பு எடுத்துள்ளேன். 2014-ல் தொடங்கி இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கீதை வாழ்வியல் நெறி பயிற்சி வகுப்புகள் எடுத்துள்ளேன்.

மனித வாழ்வின் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆளுமையை நிச்சயம் கீதை விதைக்கும். அதற்கான சிறு விதையை மக்களின் உள்ளங்களில் விதைக்க நானும் பயணித்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x