Last Updated : 03 Mar, 2017 08:04 AM

 

Published : 03 Mar 2017 08:04 AM
Last Updated : 03 Mar 2017 08:04 AM

மத்திய அரசு எரிவாயு திட்டத்தை ரத்து செய்யும் வரை ஹைட்ரோ கார்பன் போராட்டம் தொடரும்: முதல்வரின் வேண்டுகோளையும் மீறி மக்கள் அறிவிப்பு

நெடுவாசலில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என முதலமைச்சர் உறுதி அளித்திருந்தாலும், அந்தக்கிராம மக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட மறுத்து நேற்றிரவு வரை அங்கேயே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து பிப்.16-ம் தேதியில் இருந்து நெடுவாசல், கோட்டைக்காடு ஆகிய இடங் களில் தொடர் போராட்டம் நடத்தப் பட்டது. மேலும், இந்த திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோட்டைக் காட்டில் நேற்று நடைபெற்ற போராட்டத்தை ஆதரித்து திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ரகுபதி, இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.

போராட்டக் குழு ஒருங்கிணைப் பாளர் நெடுவாசலைச் சேர்ந்த சி.வேலு தலைமையில் 11 பேர் கொண்ட குழு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் சந்தித்தது. அப்போது, மீத்தேன் திட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்ததைப்போல இந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் உறுதி அளித்துள்ளார். மேலும், போராட் டத்தை கைவிடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனால் போராட்டம் உடனே கைவிடப்படும் என எதிர்பார்க்கப் பட்டது.

போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நெடுவாசலில் நேற்று போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர், காலை 10 மணிக்குள் முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித் திருந்தனர். ஆனால், நெடுவாசலில் 15-ம் நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தை ஆதரித்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் இருந்து திரண்டு வந்து கலந்துகொண்டனர். அப்போது, மத்திய அரசு எரிவாயு திட்டத்துக்கு நிரந்தர தடை விதிக்கும் வரை இந்த இடத் தைவிட்டு வெளியேற மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் ஆலோசனை

போராட்டம் கைவிடப்படாத தால் புதுக்கோட்டை ஆட்சியர் சு.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.லோக நாதன் உள்ளிட்டோர் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பிற மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான போலீஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர். நெடு வாசலில் உள்ள நிலவரம் குறித்து சார் ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் ஆய்வு செய்து உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், தமிழக அரசின் நிலைப் பாடு குறித்து புள்ளான்விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் போராட்டக் குழு ஒருங்கிணைப் பாளர்கள், விவசாயிகளிடம் ஆட்சியர் சு.கணேஷ் விளக்கினார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட எந்த முடிவையும் அப்போது அறிவிக்க வில்லை.

பின்னர், மாலை சுமார் 6.30 மணி அளவில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த போராட்ட ஒருங்கிணைப்புக் குழு என தங்களை அறிமுகம் செய்து கொண்ட சிலர், “இந்தப் போராட்டம் இன்றோடு முடிக்கப்பட உள்ளதாக பரப்பப்படும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம், மத்திய அரசு எரிவாயு திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்” என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.

நேற்று இரவு வரை போராட்டம் தொடர்ந்ததால் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x