Published : 04 Jan 2016 11:42 AM
Last Updated : 04 Jan 2016 11:42 AM

மழையும் பாதிப்பும் - கவனிக்கத்தக்க கருத்துப் பகிர்வுகள்

பேராசிரியர் கல்யாணி, மனித உரிமை செயல்பாட்டாளர்

என்னுடைய 68 ஆண்டு வாழ்க்கையில் கடந்த 2 நாட்களாக நடந்த இந்த நிகழ்ச்சியைபோல பார்த்ததே இல்லை. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் இங்கு எடுத்துரைக்கப்பட்டன. உலகில் உள்ள தண்ணீரில் நாம் பயன்படுத்துவது மிகவும் சிறிய பகுதிதான். அதை பாதுகாப்பதில்தான் நம் எதிர்காலமே இருக்கிறது. ஒவ்வொரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்த கண்காணிப்புக் குழு அவசியமாக இருக்கிறது.

நல்ல திட்டங்களை செயல்படுத்த ஊடகங்களுடன் மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். ‘யாதும் ஊரே’ அமைப்பு மூலம் மாவட்டம் தோறும் நீர் ஆதாரம், சுற்றுச்சூழல் தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த அமைப்பு, மக்கள் கூட்டமைப்பாக செயல்பட வேண்டும். திட்டப் பணிகளை மேற்கொள்வதுடன், அவற்றை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த கண்காணிப்பு குழுக்களையும் அமைக்க வேண்டும்.



ஜி.சக்திநாதன், அண்ணா பல்கலை பேராசிரியர்

நம் தெரு, நம் மாநிலம் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஏரியை அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 மாணவர்கள் சேர்ந்து சுத்தம் செய்து இரண்டரை லட்சம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளனர். மாற்றங்களைக் கொண்டு வருவதில் மக்களின் சக்தியை விடவும் மாணவர்களின் சக்தி மகத்தானது.

நாம் குடிக்கும் மெட்ரோ வாட்டர் எங்கிருந்து வருகிறது. அதை எங்கே பம்பிங் மற்றும் சுத்திகரிப்பு செய்கிறார்கள் என்ற தகவல் பலருக்கு தெரியாது. பலர் தங்கள் வீடுகளில் வாங்கும் வாட்டர் கேன் நிறுவனத்தின் விவரங்களைக்கூட தெரிந்து வைத்திருப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

அருள் கிருஷ்ணமூர்த்தி, சுற்றுப்புறச்சூழல் செயல்பாட்டாளர்

நம்முடைய வீட்டின் அருகில் உள்ள ஏரி, குளம், குட்டையை நாம் தான் பாதுகாக்க வேண்டும். நாம் வாழ்க்கை முறையை மாற்ற முடியவில்லை என்றால் ஏரி, குளம், குட்டையை காப்பாற்ற முடியாது. நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் நீர் தேவை. அதற்கு நம்முடைய பங்களிப்பு என்ன? இதனை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

சென்னையில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சுத்தம் செய்யுங்கள். 3 ஆறுகள், 312 ஏரிகள், 6 காடுகள், 2 சதுப்பு நில காடுகள், மலைகள் என அனைத்தும் கொண்டது சென்னை மாநகரம். இவ்வளவு அழகாக இருந்த சென்னை மாநகரத்தில் நாம் கட்டிடங்களை கட்டி வாழ்ந்து வருகிறோம். நாம் செய்யும் தவறுக்கு நாடு பொறுப்பேற்கக்கூடாது. அரசுடன் இணைந்து அறிவியல் பூர்வமான புனரமைப்பு மற்றும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.



பேராசிரியர் வின்சென்ட், லயோலா கல்லூரி

சென்னையில் நிலப் பரப்புக்கும், கடல் பரப்புக்கும் இடைவெளி 2.5 மீட்டர் தான் உள்ளது. அதனால்தான் மழை பெய்தவுடன் உடனடியாக வெள்ளம் வந்து விடுகிறது. இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.

சென்னையை சுற்றி 14 கால்வாய்களும், கடலுக்கு நீர் எடுத்து செல்லும் வகையில் 5 முக்கிய நீர் வழிப்பாதைகளும் உள்ளன. இவற்றை தற்போது மேம்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு மழைநீர் வடிகால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதை முழுமையாக செயல்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மழைநீர் வடிகால்வாய்களை புதிய தொழில்நுட்பங்களுடன் அமைத்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். குப்பை கழிவுகள் தேங்காமல் இருக்க தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மழைநீர் ஆங்காங்கே தேங்காமல் கடலுக்கு சென்றடையும். மறுபுறம் மாநகரின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.



வனிதா மோகன், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர்

125 ஏக்கர் கொண்ட கோவை கிருஷ்ணாம்பதி குளத்தை தூர்வாரிய சில நாட்களிலேயே மழை வந்தது. குறிச்சி குளம், வாலாங்குளம் உட்பட ஆயிரம் ஏக்கர் கொண்ட 7 குளங்களை தூர்வாரினோம்.

உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளத்தை தூர்வாரும் பணியில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டனர். நொய்யல் ஆறு, 34 ஓடை நீரின் மூலம்தான் உருவானது. அந்த 34 ஓடைகளையும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிரமிப்பாளர்கள் அடைக்க, நொய்யல் வறண்டு விட்டது. இப்போது அதில் 4 ஓடைகளை சரிசெய்ததால் நொய்யலில் மீண்டும் தண்ணீர் ஓடுகிறது. மற்ற 30 ஓடைகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.



சி.ஜி.எஸ்.மணியன், சிறுதுளி அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர்

மண்ணும், மழையும் நீரும் காற்றும் எல்லாம் சேர்ந்ததுதான் இயற்கை. நீர்நிலைகளை மீட்டு எடுக்க வேண்டும். இதற்கு மக்களின் பங்களிப்பு ஒத்துழைப்பு அவசியம் வேண்டும். குப்பைத் தொட்டியை சுற்றி குப்பைகள் கிடக்கிறது என்றால் அது தான் நம் நாடு. குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் தான் மக்கும் குப்பை, மக்காத குப்பையை சேகரிக்கும் திட்டத்தை கொண்டு வந்தோம். இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். வீடுகளில் இருந்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனியாக பிரித்து வாங்கினோம்.



சித்ரா கிருஷ்ணமூர்த்தி, சிறுதுளி அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர்

வீட்டு குப்பைகளில் 70 சதவீதம் சமையல் அறையில் இருந்துதான் கிடைக்கிறது. அவற்றை நாம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வெளியேற்ற வேண்டும். மாடியில் உள்ள இடங்களில் தோட்டம் அமைப்பது மூலமாக நல்ல சத்துள்ள காய்கறி வகைகள் நமக்கு கிடைப்பதோடு, பொருளாதார செலவும் வெகுவாக குறையும்.

இன்றைக்கு நாம் கடைகளில் வாங்கும் காய்கறிகளில் ஏராளமான நச்சுப் பொருட்கள் கலந்துள்ளன. பழைய காலத்தில் வீட்டுத் தோட்டத்தில் ஒரு குழி இருந்தது. அதில் மக்கும் குப்பைகளை போட்டு உரமாக பயன்படுத்தி இருக்கிறோம்.



கே.மயில்சாமி, சிறுதுளி அமைப்பின் செயல் அலுவலர்

சென்னையை தனியாக எடுத்தால் தீர்வு காண முடியாது. நீர்மேலாண்மை திட்டத்தை சரியாக கையாண்டால் மழை வெள்ளத்தை தடுக்கலாம். கொசஸ்தலை, அடையாறு, கூவம் ஆறுகளை பக்கிங்காம் கால்வாய் இணைக்கிறது. நல்ல முறையில் பராமரித்தால் சிறந்த நீர்வழித்தடமாக பக்கிங்காம் கால்வாய் இருக்கும். சென்னையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஏரிகள், குளங்கள் தற்போது இல்லை. தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் வீணாக கடலுக்கு செல்கிறது.



சேகர் ராகவன், மழைநீர் இல்ல அமைப்பு

மழைநீர் சேகரிப்பு பற்றி பேசுவதற்கான நேரம் இது இல்லை என்றாலும்கூட இப்போது அதுகுறித்து நாம் அவசியம் சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். நீர் ஆதாரமான வழிகளை நாம் முறையாக பராமரிப்பதன் மூலமாகவே மழை நீரை வருங்கால தலைமுறைக்காக சேமித்து வைக்க முடியும். மழைநீர் சேமிப்பில் தமிழர்கள் நிறையவே செய்திருக்கிறார்கள். அவற்றை நாம் முறையாக பராமரிக்கத் தவறிவிட்டோம்.

திருவள்ளுவரும் திருக்குறளில் ‘வான் சிறப்பு’ என்பதை 2-வது அதிகாரமாக வைத்து, நீரின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்தியிருக்கிறார். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதிலேயே மொத்தமும் அடங்கியிருக்கிறது. நகர்ப்புறங்களில் மழை நீரைச் சேமிப்பதன் மூலமாக குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதோடு, மழை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்தும் நம்மால் தப்பிக்க இயலும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x