

சுகாதாரத்துறையில் உள்ள மருந்தாளுநர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற பெருந்திரள் முறையீடு போராட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்துக்குப் பிறகு தங்களின் கோரிக்கைகள் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குநர் ஆகியோரிடம் மருந்தாளுநர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.பால்முருகன், தலைவர் வீ.கோவிந்தராஜ் ஆகியோர் கூறியதாவது:
தமிழக சுகாதாரத்துறையில் 3,800 மருந்தாளுநர் பணியிடங்கள் உள்ளன. இதில், கடந்த 3 ஆண்டுகளாக 1,200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், கடுமையான பணிச்சுமைக்கு மருந்தாளுநர்கள் ஆளாகின்றனர். எனவே, காலியாக உள்ள பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். மருந்தியல் சேவை பாதிக்காமல் கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
மேலும், பதவி உயர்வின்றி மருந்தாளுநர்கள் ஓய்வுபெறும் நிலையை மாற்ற 5 கட்ட பதவி உயர்வு வழங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உறுதிமொழி அளித்திருந்தார். அதன்படி, மருந்தாளுநர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அதோடு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மருந்து கிடங்குகளுக்கு மருந்து கிடங்கு அலுவலர் பணியிடத்தை உருவாக்க வேண்டும்.
மருந்தாளுநர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் ஏப்ரல் 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.