பாஜக தேசிய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்க வாய்ப்பு

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்க வாய்ப்பு
Updated on
2 min read

ஒடிசாவில் வரும் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ள பாஜக தேசிய செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு தமிழகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 2016 ஆகஸ்ட் 31-ம் தேதி யுடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பதவியேற்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா, ஓபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாள்தோறும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் நியமிக்கப்படாததை அனைத்துக் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.

ஏதாவது ஒரு பிரச்சினைக்காக ஆளுநரை சந்திக்க வேண்டுமானால் அவரது வருகைக்காக நாள் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது என அரசியல் கட்சித் தலைவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என பலமுறை செய்திகள் வெளியாகின. குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேல், கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவர் சங்கரமூர்த்தி உள்ளிட்டோரின் பெயர்கள் ஆளுநர் பதவிக்கு அடிபட்டன. ஆனாலும் இதுவரை புதிய ஆளுநர் நியமிக்கப்பட வில்லை.

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு தயாராகி வரும் பிரதமர் நரேந்திர மோடி, விரைவில் தமிழகம், மத்தியப்பிரதேசம், மேகாலயா, தெலங்கானா ஆகிய மாநிலங் களுக்கு ஆளுநரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது.

வரும் 15, 16 தேதிகளில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடை பெறவுள்ளது. அதில் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல், காலியாக உள்ள மாநிலங் களுக்கு ஆளுநர் நியமனம் ஆகி யவை குறித்து மூத்த தலைவர் களுடன் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தவுள்ளதாக அக்கட்சித் தலைவர் ஒருவர் தி இந்து’விடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் தமிழகத்துக்கு புதிய ஆளுநரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இந்த முயற்சி தள்ளிப்போனது. ஜெயலலிதா மறைவும், அதன் பிறகு நடந்த நிகழ்வுகளும் ஆளுநர் நியமனத்தை மேலும் தாமதமாக்கியது. ஒரு கட்டத்தில் தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக பொறுப்பேற்கும்படி வித்யாசாகர் ராவிடம் கேட்கப்பட்டது. ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அவர் குஜராத்துக்கு அருகில் உள்ள மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களுக்கு ஆளுநர் ஆவதையே விரும்புகிறார். இதனால் காலதாமதமாகி வருகிறது.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு தமிழகம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இனியும் கால தாமதம் செய்ய மோடி விரும்ப மாட்டார். இதற்காக கட்சியின் மூத்த தலைவர்களது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வரு கிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in