Published : 19 Sep 2016 09:48 AM
Last Updated : 19 Sep 2016 09:48 AM

வீடு கட்ட அனுமதி கோரி பழவேற்காடு - கரிமணல் மீனவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்: பெண்கள் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு

அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கோரி, பழவேற்காடு-கரிமணல் மீனவர்கள் 2-வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது, மீனவ பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி மற்றும் கடலோரத்தை ஒட்டியுள்ள 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கரிமணல், அரங்கங்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வசித்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர், கடந்த 1984-ம் ஆண்டு ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்காக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

அவ்வாறு வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு பழவேற்காடுவை சுற்றி மாற்று இடங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் கரிமணல் கிராமத்தில் இருந்து வெளியேறிய 24 குடும்பங்களுக்கு கடந்த 1986-ம் ஆண்டு லைட்ஹவுஸ் குப்பம் அருகே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் நிலம் ஒதுக்கி, வீட்டுமனை பட்டாவை வழங்கியது அரசு.

அரசு வழங்கிய அந்த நிலம் தாழ்வான பகுதியாக இருந்ததால், அப்பகுதிக்கு அருகே மேடான பகுதியாக இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் அந்த மீனவ மக்கள் வசிக்கத் தொடங்கினர். கடந்த 30 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 24 குடும்பங்கள் இன்று, 125 குடும்பங்களாகி விட்டன.

ஆனால், அந்த மீனவ மக்களுக்கு தற்போது வசிக்கும் நிலத்துக்கு பட்டா இல்லை. அதே நேரத்தில், அவர்களுக்கு ஏற்கெனவே அரசு வழங்கிய நிலம் 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாததால் அது அரசு நிலமாகி விட்டது.

இந்நிலையில், கரிமணல் கிராம வாசிகளின் கோரிக்கையின் அடிப்படையில், கடந்த 5 மாதங் களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட நிலத்தில் குடியேற வருவாய்த் துறையினர் அனுமதி அளித்தனர். அதன் விளைவாக, கரிமணல் கிராம மீனவ மக்கள் தங்களுக்கு அரசு ஏற்கெனவே ஒதுக்கிய நிலத்தில் வீடுகள் கட்ட முயன்றனர்.

இதற்கு பழவேற்காடுவை சுற்றியுள்ள மற்ற கிராம மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட நிலத்தில் பஸ் நிலையம் அமைக்கவேண்டும் என கோரி வருகின்றனர். எனவே, வருவாய்த் துறை அதிகாரிகள், கரிமணல் கிராமவாசிகள் அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட தற்போது தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கோரி மீனவ மக்கள், கரிமணல்குப்பத்தில் கடந்த மாதம் 10-ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். பொன்னேரி சார்-ஆட்சியர் தண்டபாணி, ‘20 நாட்களுக்குள் கரிமணல் மீனவ மக்கள் தங்களுக்கு அரசு ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடுகட்டி குடியேற உரிய நடவடிக்கை’ எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் கரிமணல் மீனவ மக்கள், கடந்த 6-ம் தேதி கரிமணல் குப்பத்தை காலி செய்துக் கொண்டு, தாங்கள் ஏற்கெனவே வசித்த ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள ஆந்திர பகுதியில் குடியேற, ஆந்திர பகுதியை நோக்கி செல்லும் போராட்டத்தை நடத்தினர்.

அப்போது, பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டைகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, “பழவேற்காடு-கரிமணல் மீனவ மக்களுக்கு, ஏற்கெனவே அரசு ஒதுக்கிய நிலத்தை 10 நாட்களுக்குள் அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உறுதியளித்தார்.

ஆனால், 10 நாட்கள் கடந்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என மீனவ மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கோரி, 200-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் காலை கரிமணல்குப்பம் பகுதியில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர். அந்த போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

திருவள்ளூர் எம்.பி. வேணு கோபால், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் நேற்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ‘3 நாட்களுக்குள், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் சென்று உரிய நட வடிக்கை’ எடுப்பதாக உறுதியளித்தனர்.

எனினும், அதை மீனவ மக்கள் ஏற்க மறுத்ததோடு, மீனவ பெண்களில் 5 பேர் திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அவர் களை போலீஸார் தடுத்து நிறுத்தி னர். அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x