

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை முற்றுகையிடவுள்ளதாக நேற்று காலையில் தகவல் வெளியானது. இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, அவரது இல்லத்தை நினைவு இல்லமாக்க வேண்டுமென அதிமுகவில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் சமீபத்தில் பேசும்போது, “போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு எனக்கும் தீபாவுக்கும் மட்டுமே சொந்தம். வேறு யாரும் அதை உரிமை கொண்டாட முடியாது” என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், போயஸ் தோட்ட இல்லத்தை தீபக் மற்றும் தீபா ஆதரவாளர்கள் நேற்று காலையில் முற்றுகையிடப்போவதாக தகவல் பரவியது. இதனால், அங்கு வழக்கத்தை விட அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டு இருந்ததை காண முடிந்தது. மேலும், வேதா இல்லத்துக்கு செல்லும் பின்னி சாலையின் நுழைவு பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போலீஸார் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.