Last Updated : 07 Jul, 2016 10:29 AM

 

Published : 07 Jul 2016 10:29 AM
Last Updated : 07 Jul 2016 10:29 AM

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஏரிகளின் புனரமைப்பு பணிகள் நிதி பற்றாக்குறையால் முடக்கம்

விரைவில் நிதி ஒதுக்க அரசுக்கு கோரிக்கை

சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஏரிகளை நிரந்தரமாக புனரமைக்கும் பணிக்கான நிதி கிடைக்காததால் பொதுப்பணித் துறையால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பரில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, ஏரிகள் முழுமையாக நிரம்பின. ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு வெளியேறிய நீர், கூவம் மற்றும் அடையாற்றில் வந்ததால், சென்னை நகரே வெள்ளக்காடானது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத் தவரை, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 912 ஏரிகள், உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரத்து 83 ஏரிகள் உள்ளன. இதில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 75-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தொடர் கனமழையால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. சில ஏரிக் கரைகளை ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக உடைத்தும் விட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 587 ஏரிகள் உட்பட 1236 ஏரிகள் உள்ளன. இது தவிர, சிஎம்டிஏ வரையறைக்கு உட்பட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில், காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறையின் ஏரிகளும் அடக்கம். குறிப்பாக இந்த ஏரிகள்தான் சென்னையின் தெற்கு பகுதி வெள்ளத்தால் சூழப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தன.

அப்போதைய கனமழையால், பல்லாவரம், பீர்க்கண்கரணை, கடப்பேரி, இரும்புலியூர், மடிப்பாக்கம், மாடம்பாக்கம், குரோம்பேட்டை வீரராகவா ஏரி, நாராயணபுரம், கோவிலம்பாக்கம் மற்றும் ராஜ கீழ்ப்பாக்கம் ஏரிகள் உடைப்பெடுத்து தண்ணீர் வெளியேறியது.

பொதுப்பணித் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் உடனடியாக செயல்பட்டு, ஏரிகள், குளங்களின் கரைகளை சீரமைத்து, அப்போதைக்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், நிரந்தரமாக கரை கள் அமைத்து, நீரை தேக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மீண்டும் இந்தாண்டு இதுபோல் தொடர் கனமழை பெய்தால், இந்த மாவட்டங்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இது தொடர்பாக பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கனமழை வெள்ளம் காரணமாக, ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டபோது தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட கரைகள், கலங்கல்களை உறுதி மிக்கதாக, அதி உறுதிமிக்கதாக மாற்றினால்தான் அடுத்த கட்ட மழைக்கு தாங்கும். தற்போது நாங்கள், ஒப்பந்ததாரர்கள் ஏற்கெனவே செய்த பணிக்கே பணம் கொடுக்க முடியாமல், கடன்காரர்களைப் போல் இருக்கிறோம். ஒவ்வொரு பகுதியிலும் ரூ.4 கோடி. ரூ.5 கோடி என ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை உள்ளது. அதை கொடுத்தால்தான் அடுத்த பணிகளை அவர்களுக்கு அளிக்க முடியும். ஆனால், பெரிய துறை என பெயர் உள்ள பொதுப்பணித் துறையில் தற்போது பணம் இல்லை.

காஞ்சிபுரம் பகுதியில் சமீபத்தில் வந்த உலக வங்கி நிபுணர்கள், மழைக்கால நடவடிக்கைகளை பாராட்டியதுடன், நிரந்தர புனரமைப்பு குறித்து கேட்டனர். நிதி இல்லை என்றதும், 46 ஏரிகளை கண்டறிந்து முன்கூட்டியே நிதியளித்தனர். இதில், ஆக்கிரமிப்பில் சிக்கிய நீர்நிலைகளை விட்டுவிட்டனர். இதேபோல் திருவள்ளூரிலும் சிக்கல் உள்ளது. மழையின் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தேர்தலுக்காக நிறுத்தப்பட்டது. தாம்பரம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரியில் உள்ள ஆயிரத்து 600 வீடுகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கினால்தான் மற்ற பணிகள் நடக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொதுப்பணித்துறை ஒப்பந்த தாரர்களும் தங்களுக்கான நிலுவைத் தொகை தரப்பட்டால்தான் பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பொதுப் பணித் துறை முன்னாள் தலைமை பொறியாளர் ஏ.வீரப்பன் கூறியதாவது:

தமிழகத்தில் நீர்நிலைகளை பாது காப்பது, கரைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது, அதிகப்படியான நீரை தேக்குவது தொடர்பான எந்த தொலைநோக்கு திட்டமும் இல்லை.

பொதுப்பணித் துறைக்கு மத்திய அரசின் நிதிதான் அதிகளவில் பயன்படுத்தப்படும். ஆனால், தமிழக அரசில் பெரும்பாலும் மத்திய அரசு நிதி பயன்படுத்தப்படுவதில்லை. கர்நாடக, ஆந்திர அரசுகள், டெல்லியில் அதிகாரிகளை தங்க வைத்து, தேவையான திட்ட அறிக்கைகளை அளித்து நிதியை பெறுகின்றன. ஆனால், தமிழகத்தில் கமிஷனுக்காக உலக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் நிதியை பெற்றே பணிகளை மேற்கொள்கின் றனர்.

ஏரி, குளங்கள், நீர்நிலைகளை பாதுகாக்க தொலைநோக்கு திட்டத்தை வகுக்க வேண்டும். அதிகாரிகளை டெல்லிக்கு அனுப்பி, திட்டங்களை அளித்து அதிகளவில் நிதி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x