

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டு வதை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப் படும் என்று முதல்வர் கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசும்போது, ஆந்திர மாநில அரசு சார்பில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் இடத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போய் பார்வையிட்டதாக கூறினார்.
அப்போது முதல்வர் கே.பழனிசாமி குறுக்கிட்டுப் பேசியதாவது:
மேம்பாலத்துக்கான அடித்தள பணி
ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் வழியில் கங்குத்தி அருகே பாலாற்றில் தடுப்பணை கட்டப்படுவதாக தகவல் வந்ததும், கடந்த 14-ம் தேதி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். பாலாற்றின் குறுக்கே மண் சாலை செல்லும் இடத்தில் மேம்பாலத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருவதாக கண்டறிந்தனர். மறு நாளும் பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அந்த இடத்தில் உயர்மட்டப் பாலம் கட்டுவது உறுதி செய்யப் பட்டது.
இப்பாலம் கட்டுவதால் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீருக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. ஏற்கெனவே பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்தது குறித்தும், புதிதாக கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசு மற்றும் ஆந்திர மாநில முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதற்கு சரி யான பதில் கிடைக்காததால் தடுப்பணைகள் கட்டுமானப் பணியை நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நிலுவை யில் உள்ளது.
விவசாயிகளின் நலனுக்கு எதிராக ஆந்திர அரசு மேற்கொள்ளும் எந்தவொரு செயலையும் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு எடுக்கும்.
இவ்வாறு முதல்வர் கே.பழனி சாமி தெரிவித்தார்.