

கன்னியாகுமரி வழித்தடத்தில் இன்று திறக்கப்படவுள்ள சுசீந்திரம் பாலம், அடிக்கல் நாட்டப்படவுள்ள நரிக்குளம் பாலம் ஆகியவை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் அமைந்துள்ளன. சுற்றுலா மேம்பாட்டுக்கும் இவை வழிவகுக்கும்.
சுசீந்திரத்தில் ரூ. 7.5 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு நிதியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே உள்ள பழைய கல்பாலத்தையும் சேதப்படுத்தாமல் மக்கள் பயன்பாட்டுக்கே தொடர்ந்து விடப்படுகிறது. இதனால், நெடுநாளாக கன்னியாகுமரி வழித்தடத்தில் இருந்து வந்த போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
இன்று திறப்பு விழா
புதிய பாலத்தின் முறைப் படியான திறப்புவிழா கன்னியாகுமரியில் இன்று நடைபெறுகிறது. மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி பாலத்தை திறந்து வைக்கிறார். இதுபோல, கன்னியா குமரியை அடுத்துள்ள நரிக்குளம் பகுதி சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வருவதாலும், அப்பகுதியில் பழக்கமில்லாமல் வாகனங்களில் வருவோர் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நரிக்குளத்தில் ரூ. 21 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசு மேம்பாலம் அமைக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்றைய நிகழ்ச்சியில் நடைபெறுகிறது.
மேலும் மத்திய அரசின் ரூ. 202 கோடி ஒதுக்கீட்டில் மாநில சாலைப்பணிகள் நடைபெறவு ள்ளன. கடந்த 5 மாதங்களுக்கு முன்புவரை பழுதான சாலைகளால் குமரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். தற்போது தேசிய நெடுஞ்சாலைகள், கிராம சாலைகள் என 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கப் பட்டுள்ளன.