Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM

11 மாவட்டங்களில் காலியாக உள்ள மகளிர் திட்ட அதிகாரி பதவிகள்

திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்பட 11 மாவட்டங்களில் மகளிர் மேம்பாட்டு திட்ட அதிகாரி பதவிகள் காலியாக உள்ளன. இதனால், அந்த மாவட்டங்களில் வறுமை ஒழிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளன.

டி.ஆர்.டி.ஏ. திட்ட இயக்குநர்

மத்திய-மாநில அரசுகளின் ஊரக வளர்ச்சி திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம், மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டம், பசுமை வீடுகள் திட்டம் போன்ற திட்டப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டி.ஆர்.டி.ஏ.) திட்ட இயக்குநர்கள் கவனித்து வருகிறார்கள்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்குதல், அவர்களுக்கு சுழல் நிதி வழங்கி தொழில்தொடங்க உதவி செய்தல், ஊராட்சி அளவில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் அமைத்து ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.

தொய்வான வறுமை ஒழிப்பு

ஊரக வளர்ச்சித்துறையில் மொத்தமுள்ள 82 இணை இயக்குநர் பதவிகளில் 19 இடங்கள் காலியாக கிடக்கின்றன. இதில் 13 இடங்கள் மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்ட அதிகாரிகளுக்கான பதவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சிய 6 இடங்களும் டி.ஆர்.டி.ஏ. திட்ட இயக்குநர் பதவிகள் ஆகும். தமிழ்நாட்டில் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டப்பணிகளை கவனிப்பவர்கள் மாவட்ட மகளிர் திட்ட அதிகாரிகள்தான்.

திருவள்ளூர், விழுப்புரம், சேலம், கோவை, திருச்சி, பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் மாவட்ட மகளிர் திட்ட அதிகாரி பதவிகள் காலியாக உள்ளன. தற்போது அந்த பொறுப்பை உதவி திட்ட அதிகாரிகள்தான் கவனித்து வருகிறார்கள். திட்ட அதிகாரி பதவிகள் காலியாக இருப்பதால் மேற்கண்ட 11 மாவட்டங்களில் வறுமை ஒழிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அரசாணை வந்து 4 மாதம்

இதேபோல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் டி.ஆர்.டி.ஏ. திட்ட இயக்குநர் பதவிகளும் காலியாக கிடக்கின்றன.அதனாலும் வளர்ச்சித் திட்டப்பணிகள் சுணக்கம் அடைந்துள்ளன. இதில் நீலகிரி மாவட்ட திட்ட இயக்குநர் பதவி தொடர்ந்து நீண்ட காலமாக காலியாக உள்ளது.

ஊரக வளர்ச்சித்துறையில் உதவி இயக்குநர் நிலையில் இருந்து இணை இயக்குநராக பதவி உயர்வு வழங்குவதற்கு நடப்பு நிதியாண்டில் (2013-2014) 31 பணியிடங்களுக்கு அனுமதி அளித்து கடந்த 6.9.2013 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 49 உதவி இயக்குநர்கள் விவரங்கள் அடங்கிய பதவிஉயர்வு முன்னுரிமை பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அரசாணை வெளியிட்டு கிட்டதட்ட 4 மாதங்கள் ஆகியும் பதவி உயர்வு பட்டியலுக்கு அரசு இன்னும் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x