ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறுக: ராமதாஸ் வலியுறுத்தல்

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெறுக: ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி பயணிகள் ரயில் கட்டணம் நாளை மறுநாள் முதல் 2% உயர்த்தப்படும் என்றும், சரக்குக் கட்டணமும் வரும் 10 ஆம் தேதி முதல் 1.7% உயர்த்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டீசல் விலை உயர்வு காரணமாகத் தான் பயணிகள் கட்டணமும், சரக்குக் கட்டணமும் உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு கூறுவதை ஏற்கமுடியாது.

“கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக லாலுவும், இணை அமைச்சராக பா.ம.க.வை சேர்ந்த வேலுவும் பதவி வகித்தனர். அந்த 5 ஆண்டுகளில் டீசல் விலை மொத்தம் 53% உயர்த்தப்பட்டது. எனினும், பயணிகள் கட்டணம் ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை. மாறாக அத்துறையின் லாபம் அதிகரித்ததால் பயணிகள் கட்டணம் அடையாளமாக குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த 6 மாதங்களில் டீசல் விலை 8.5% மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், அதைக் காரணம் காட்டி ரூ. 4,700 கோடி கட்டண உயர்வு சுமையை மக்கள் தலையில் சுமத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.

இத்துறைக்கு இழப்பு ஏற்படுவதற்கு காரணம் அதன் நிர்வாகத் திறமையின்மையே தவிர, எரிபொருள் விலை உயர்வு அல்ல. டீசல் விலை உயர்வால் சுமை ஏற்பட்டிருப்பது உண்மை தான். அதை நிர்வாகத் திறமையின் மூலம் சமாளிக்க வேண்டுமே தவிர கட்டண உயர்வு என்ற சுமையை மக்கள் தலையில் சுமத்தி சமாளிக்க முயலக்கூடாது.

எனவே, மக்களை பாதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள பயணிகள் மற்றும் சரக்குக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்” என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in