Published : 05 Feb 2014 01:25 PM
Last Updated : 05 Feb 2014 01:25 PM

42 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்ட கோயில்- விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு

ஆம்பூர் அருகே இடிக்கப்படாமல் 42 அடி தூரம் நகர்த்தப்பட்ட 100 டன் எடையுள்ள கோயில் கோபுரம் புதிய இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. விரைவில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் திருப்பணி குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஆம்பூர் அடுத்த அய்யனூர் கிராமத்தில் ஆதி பெத்தபலி கெங்கையம்மன் கோயில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பல்வேறு காலகட்டங்களில் பக்தர்களின் நன்கொடையால் வளர்ச்சியடைந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. பக்தர்களின் உதவியுடன் 3 நிலைகள் கொண்ட சுமார் 40 அடி உயர கோபுரத்துடன் கோயில் கட்டப்பட்டு 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் தற்போது வாலாஜாவில் இருந்து கிருஷ்ணகிரி வரை உள்ள நான்கு வழிச்சாலை ஆறுவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக சாலை விரிவாக்கப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த பணியால் அய்யனூர் ஆதி பெத்தபலி கெங்கையம்மன் கோயிலுக்கு மீண்டும் சோதனைக்காலமாக அமைந்துவிட்டது. சுமார் 40 அடி உயரமுள்ள கோபுரம் இடிக்கப் படும் நிலை ஏற்பட்டது.

ஆனால், இந்த முறை கோயில் கோபுரத்தை இடிக்காமல் சுமார் 42 அடி தூரம் பின்நோக்கி நகர்த்தி புதிய இடத்தில் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தனியார் நிறுவன உதவியுடன் கோயில் நகர்த்தும் பணி கடந்த ஜனவரி 3-ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக கோயில் கோபுரத்தின் அடித்தளம் இடிக்கப்பட்டு அங்கு நான்கு சக்கர வாகனங்களை தூக்கி நிறுத்தும் ஜாக்கிகள் பொறுத்தப்பட்டன. தினமும் சிறிது சிறிதாக நகர்த்தப்பட்ட கோயில் கோபுரம் சுமார் 42 அடி தூரம் உள்ள புதிய இடத்தில் சரியான கோணத்தில் திங்கட்கிழமை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் திருப்பணிக்குழு தலைவர் மூர்த்தி கூறுகையில், ‘‘கடந்த ஒரு மாதமாக நடந்த பணி திருப்தியாக நல்ல முறையில் முடிந்துள்ளது. கோயில் கோபுரத்தை சரியான திசையில் நிலை நிறுத்தியுள்ளோம். சுமார் 100 டன் எடையுடன் நகர்த்தப்பட்ட கோபுரத்தின் அடித்தளத்தில் உள்ள ஜாக்கிகள் விரைவில் அகற்றப்படும். இதற்காக அடித்தள பகுதியை பலப்படுத்தும் பணி நடந்துவருகிறது. ஓரிரு நாளில் இந்த பணி முடிந்துவிடும். விரைவில் பக்தர்களின் ஆதரவுடன் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x