Published : 08 Jan 2014 08:05 PM
Last Updated : 08 Jan 2014 08:05 PM

கோவை: பிரசவித்த தாய்மார்களுக்கு உடைகள், காசோலைகள்
மாநகராட்சியின் அசத்தல் திட்டம்

மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் உடைகள், நாப்கின், மற்றும் கொசுவலை வழங்கும் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் நடந்த இந்த விழாவில் கோவை தெற்கு எம்.எல்.ஏ சேலஞ்சர் துரை, மேயர் வேலுச்சாமி, ஆணையாளர் க.லதா மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாநகராட்சிப் பகுதியில் ஒரு மாதத்திற்கு சுமார் 1540 பிரசவங்கள் நடக்கின்றன. இதில், தனியார் மருத்துவமனையில் சுமார் 1000 பிரசவங்களும், கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 400 பிரசவங்களும், மாநகராட்சி மருத்துவமனைகளில் சுமார் 150 பிரசவங்களும் நடக்கின்றன. கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 20 மகப்பேறு மருத்துவமனைகளில் 11 சதவீதம் பிரசவங்களே நடக்கின்றன.

தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள், தகுதி வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் இருந்தும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை பிரசவங் களுக்கென்று பொதுமக்கள் நாடிச் செல்கின்றனர். மேலும், ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற 6 அறுவைச்சிகிச்சை அரங்குகளுடன் கூடிய மாநகராட்சி நகர் நல மையங்களும் செயல்பட்டு வருகின்றன. தற்போது இம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஏழை தாய்மார்கள் மாநகராட்சி மகப்பேறு மருந்தகங்களில் ஏற்படும் கூட்டத்தை குறைப்பதற்காகவும், பிரசவித்த தாய்மார்களின் உடல் ஆரோக்கியம் கருதியும் தாய்மார்களுக்கு 3 நாட்களுக்கு காலை பால், ரொட்டியும், மதியம் முட்டையுடன் கூடிய சாப்பாடு, இரவு டிபன் வழங்கப்பட்டு வருகிறது.

பிரசவித்த தாய்மார்களின் அவசியத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 2 நைட்டிகள், குழந்தைகளுக்கான 3 உடைகள், 6 பேபி நாப்கின்கள், கொசுவலை, தாய்மார்களுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் ஒரு பேபி டவல் ஆகியவற்றை மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள 20 நகர்நல மையங்களில் அனைத்து தாய்மார்களுக்கும் கோயமுத்தூர் மாநகராட்சி மூலம் வழங்கப்படுகிறது.

இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.631 மதிப்பிலான உடைகள் மற்றும் நாப்கின் வழங்கப்படுகிறது. ஏழை தாய்மார்களின் வசதிக்காக ஜனனி சுரக்ஷா திட்டத்தில் ரூ.600-க்கான காசோலையும், குழந்தை பிறந்து வீட்டிற்கு செல்லும்போது 3 தினங்களுக்குள் பிறப்புச் சான்றிதழும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாநகராட்சி நகர்நல மையங்களில் ஏழை மக்களின் வசதிக்காக அனைத்து வகையான நோய்களின் தன்மையைக் கண்டறியக்கூடிய நவீன ஸ்கேன் இயந்திர வசதி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

தமிழகத்திலேயே முதல்முறையாக எந்த மாநகராட்சியிலும் செயல்படுத்தாத நலம் பயிலும் திட்டத்தை கோயமுத்தூர் மாநகராட்சி மருத்துவமனைகளிலும் தொடங்கி செயல்படுத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x