Published : 19 Nov 2014 03:26 PM
Last Updated : 19 Nov 2014 03:26 PM

தருமபுரி சம்பவம் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: தமிழிசை வலியுறுத்தல்

தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி முதல் 11 பச்சிளங்குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது, "ஒரே நேரத்தில் பச்சிளங் குழந்தைகள் இறந்த சம்பவத்தை சாதாரணமாக நினைத்து விட முடியாது. இது இயற்கையான மரணம்.

நான் ஒரு மருத்துவர், அரசு மருத்துவமனையில் இருக்க வேண்டிய மருத்துவ வசதிகள் என்னவென்பது எனக்கு தெரியும்.

தருமபுரி அரசு மருத்துவமனையில், அடிப்படை வசதிகள் இல்லாததுதான் குழந்தைகள் இறப்பிற்கு காரணம். ஆஸ்பத்திரியில் 400 பணியிடங்கள் கூட காலியாக இருந்தது என்றும் கூறுகிறார்கள்.

எனவே, பச்சிளங்குழந்தைகள் வார்டில் எத்தனை டாக்டர்கள், நர்சுகள் பணியாற்றினார்கள். என்னென்ன வசதிகள் இருந்தது என்பதை அரசு விளக்க வேண்டும். குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வசதி இருக்கிறதா? என்பது குறித்து அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்போது தான் அது வெளிப்படையான விசாரணையாக இருக்கும்" இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x