

ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்லும் சென்னை நகரின் மின்தேவை இந்த ஆண்டும் புதிய அளவை எட்டியுள்ளதே அவ்வப்போது மின்வெட்டு ஏற்படக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட நேரத்தில் சென்னையின் மொத்த மின் தேவை 3,162 மெகாவாட்டாக இருந்துள்ளது. இந்த ஆண்டில் சென்னைக்கு தேவைப்பட்ட அதிகளவிலான மின்சாரம் இதுவே என அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே செவ்வாய் இரவு பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி 3,101 மெகா வாட் சென்னையில் பயன்படுத்தப்பட்டதே அதிக அளவாக இருந்தது. அந்த அளவை கடந்த செவ்வாய்க்கிழமை தேவை முறியடித்துள்ளது என தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக (டான்ஜெட்கோ) அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தண்டையார்பேட்டையில் உள்ள 230- கிலோ வோல்ட் திறன் கொண்ட மின்சார ஃபீடரில் ஏற்பட்ட கோளாறு தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படக் காரணமாக இருந்தது. இதே காரணத்தால்தான் நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஆவடி, பட்டாபிராம், நெமிலிசேரி பகுதிகளிலும் அடிக்கடி மின்தடை ஏற்படக் காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த 20 நாட்களில் சென்னை மக்கள் மூன்று முறை கடுமையான மின்வெட்டால் அவதிக்குள்ளாகினர். கடந்த ஏப்ரல் 28-ல் தென் சென்னையைத் தவிர அனைத்து பகுதிகளுமே இருளில் மூழ்கின. தண்டையார் பேட்டை, மயிலாப்பூர் துணை மின்நிலையங்கள் செயல்படவில்லை.
மே 4-ம் தேதி அலமாத்தி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சென்னையை மின்சாரம் இன்றி தவிக்கவிட்டது. மே 10-ல் தண்டையார் பேட்டை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு வடக்கு, மத்திய சென்னையை இருளில் மூழ்கச் செய்தது.
இந்நிலையில் மே 16-ம் தேதி சென்னையின் மின்சார தேவை 3,200 மெகா வாட்டாக அதிகரிக்கவே மின் பகிர்மான நெட்வொர்க் சூடேறியதால் மின் தடை ஏற்பட்டது என மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இப்போதுவரை சென்னையின் மின் தேவை சமாளிக்கும் அளவிலேயே இருக்கிறது. அதனால் பகிர்மானத்தில் பெரிய அளவில் சிக்கல் இல்லை. இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் மின்தடைகளுக்கு அளவுக்கு அதிகமான வெப்பம், அதிகரிக்கும் மின் பயன்பாடு மற்றும் கொரோனா எஃபெக்ட் எனப்படும் அறிவியல் மாற்றங்களுமே காரணம் எனவும் அதிகாரிகள் கூறினர்.