

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பிரம்மாண்ட நினைவு வளைவு அமைக்கப்படும். புதிய அணைக்கட்டுகள் மற்றும் தடுப்பணைகள் ரூ.1000 கோடியில் கட்டப்படும் என முதல்வர் கே.பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நெடுஞ் சாலைகள், பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை கள் விவாதத்தின் முடிவில் முதல்வர் கே.பழனிசாமி பேசிய தாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் நினைவாக நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பிரமாண்ட நினைவு மண்டபம் அமைக்க உலகளாவிய கட்டிட கலைஞர்கள், நிறுவனங்களிடம் இருந்து வரைபடங்களை பெற விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிறந்த வரைபடங்களை தேர்வு செய்து நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது.
மேம்பாலங்கள்
நடப்பாண்டில், திருவள்ளூர், வேலூர், கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் 9 ரயில்வே மேம்பாலங்கள், கீழ் பாலங்கள், மதுரை கோவை மாவட்டங்களில் மாநில நிதியி்ல் 2 ரயில்வே மேம்பாலங்கள் ஆகிய 11 பாலங்கள் ரூ.529 கோடியே 39 கோடி மதிப்பில் கட்டப்படும்.
சென்னை நகரில், போக்கு வரத்து நெரிசலை குறைக்க, குன்றத்தூர், மடிப்பாக்கம், மாடம்பாக்கம், கொரட்டூர் சந்திப்புகளில் 4 மேம்பாலங்கள் மற்றும் வடபழனி முதல் அசோக் பில்லவர் வரை உயர்மட்டப்பாலம் ரூ.380 கோடியில் கட்டப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.2 கோடியே 5 லட்சத்தில் தயாரிக்கப்படும்.
3 ஆண்டுகளில்..
நிலத்தடி நீரை செறிவூட்டவும், ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்லவும், புதிய தடுப்பணைகள், நிலத்தடி கீழ் தடுப்புசுவர்கள் மற்றும் அணைக்கட்டுகளை ரூ.1000 கோடி மதிப்பில் 3 ஆண்டுகளில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.350 கோடி மதிப்பில் 75 கோடியில் தடுப்பணைகள், நிலத்தடி கீழ் தடுப்பு சுவர்கள் 10 இடங்களில் கட்டப்படும். சென்னை வேளச்சேரி ஏரியை புனரமைக்கும் பணி ரூ.25 கோடியில் செயல்படுத்தப்படும். கன்னியாகுமரி மாவட்டம் விளவங் கோடு, பூந்துறையில் தூண்டில் வளைவு ரூ.15 கோடியில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரி வித்தார்.