Published : 17 May 2017 03:52 PM
Last Updated : 17 May 2017 03:52 PM

உணவுப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 6 ஆண்டுகளில் 973 பேர் கைது: அமைச்சர் காமராஜ் தகவல்

உணவுப் பொருட்கள் கடத்தியதாக கடந்த 6 ஆண்டுகளில் 973 தடுப்பு காவல் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக முதல்வரின் ஆணையின்படி, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ரா.காமராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கோபாலபுரம் பொது விநியோகத் திட்ட கிடங்கு, அமுதம் நியாய விலை அங்காடிகள், பண்ணை பசுமை நுகர்வோர் கடை மற்றும் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடி ஆகியவற்றில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விலையில்லா அரிசி, மானிய விலையில் வழங்கப்படும் சர்க்கரை, கோதுமை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு வகைகள், பாமாயில் ஆகியவை உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையரின் மாத ஒதுக்கீட்டின்படி, கிடங்கிலிருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டிருப்பதையும், அங்காடிகளில் போதுமான அளவு இருப்பு வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருவதையும் அமைச்சர் காமராஜ் ஆய்வின் போது உறுதி செய்தார்.

கிடங்குகளிலிருந்து விடுவிக்கப்படும் பொருட்கள், தீவிர தர பரிசோதனைக்குப் பின்னரே அங்காடிகளுக்கு அனுப்பப்பட வேண்டுமென்று அறிவுறுத்திய அமைச்சர் காமராஜ், சேமிப்பிலிருந்த அரிசி, பருப்பு வகைகள் முதலியவற்றின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தார்.

மூட்டைகள் அனைத்தும், இயக்கப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சமச்சீர் செய்து, ஒப்புதல் பெற்ற பின்னரே லாரிகளில் ஏற்றப்பட வேண்டுமென்று கிடங்கு அலுவலர்களை அறிவுறுத்திய அமைச்சர் காமராஜ், லாரிகளில் ஏற்ற தயாராக வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை மறு எடை செய்து பரிசோதித்தார்.

மேலும், அமுதம் நியாய விலை அங்காடிகள் ஆய்வின்போது, அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தேவைக்கேற்ப தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறதா என்பதைக் கேட்டறிந்த அமைச்சர் காமராஜிடம், தரமான பொருட்கள் சரியான எடையுடன் சீரான முறையில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன என்றும், பண்ணை பசுமை கடைகளில் புதிய காய்கறிகள் வெளிச்சந்தை விலையைவிட குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

பொது விநியோகத்திட்டத்திற்கு மூன்று மாத தேவைக்கு புழுங்கல் மற்றும் பச்சரிசியும், கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் முதலியன தேவையான அளவில் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

புழக்கத்திலுள்ள பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டுகள் (மின்னணு குடும்ப அட்டைகள்) வழங்க வேண்டுமென முன்னாள் முதல்வர் உத்தரவிட்டதன்படி, கடந்த 1.4.2017 அன்று ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முதல்வரால் துவக்கப்பட்டு, இன்று வரை 80 லட்சத்து 17 ஆயிரத்து 938 ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஸ்மார்ட் கார்டுகள் இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்டு இதுவரை 973 நபர்கள் தடுப்பு காவல் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x