Published : 23 Sep 2016 08:37 AM
Last Updated : 23 Sep 2016 08:37 AM

உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் 35 பவுன், ரூ.1.3 லட்சம் திருடியவர் கைது: கண்காணிப்பு கேமராவால் பிடிபட்டார்

மாதவரத்தில் உறவினர் வீட்டில் நடந்த நினைவுநாள் நிகழ்ச்சியின் போது நகைகள் மற்றும் பணத்தைத் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மாதவரம் நடேசன் நகரை சேர்ந்தவர் பவன்குமார் (40). மாதவரம் ஜி.என்.டி. சாலையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த 18-ம் தேதி காலை பவன்குமாரின் வீட்டில் ஒரு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலையில் பவன்குமார் வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 62 கிராம் எடையுள்ள தங்க நகைகள், 215 கிராம் எடையுள்ள தங்கக் கட்டி மற்றும் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவற்றை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக பவன்குமார், மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பவன் குமார் வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில், நிகழ்ச் சிக்கு வந்திருந்த ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.

விசாரணையில் அவர் பவன் குமாரின் உறவினரான கவுதம் என்பவரின் மகன் திலீப்குமார் (24) என்பது தெரிந்தது. கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரின் தோட்டத்தில் வசிக்கும் திலீப்குமாரை போலீ ஸார் விசாரித்தபோது, கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததால் மேற்படி நகைகள் மற்றும் பணத்தை அவர் திருடியது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 62 கிராம் எடையுள்ள தங்க நகைகள், 215 கிராம் எடையுள்ள தங்கக் கட்டி மற்றும் பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டன. திலீப்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x