

நான் அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசினார்.
சென்னை கோடம்பாக்கத்தில் இன்று ரசிகர்களுடான சந்திப்பு நிகழ்ச்சியில் ரஜினியின் அரசியல் பேச்சு சில அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
ஸ்டாலின் (திமுக செயல் தலைவர்) : ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அரசியலுக்கு வருவதும், வராததும் அவருடைய விருப்பம். ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன்.
திருமாவளவன் (விசிக தலைவர்): ரஜினி அரசியலுக்கு வந்தால் நண்பனாக வரவேற்பேன் .
அன்புமணி (பாமக இளைஞரணித் தலைவர்): சினிமா துறையினர் 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டது போதும் என்பதே மக்களின் மனநிலை. மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் என மற்றவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்றே மக்கள் நினைக்கிறார்கள்.
தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்): நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடம் ஊழலை எதிர்ப்பதாக குறிப்பிட்டது பாஜகவின் கருத்து. அவரது பேச்சின்மூலம் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. ரஜினி அரசியலுக்கு வரும்போது நல்ல கட்டமைப்போடும், நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார்.