

கடல் அட்டையை பிடிப்பதற்கான தடையை அரசு நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடல் அட்டைகளை பிடிப்பதற்கான தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியூ), தேவிபட்டினம் வட்டார மீனவ மக்கள் ஆகியோர் இணைந்து தேவிபட்டினம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ராஜா சத்திரத்தில் இருந்து பேரணியாகச் சென்று மீன்பிடி இறங்குதளம் உள்ள கடல் பகுதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் கருமலையான் தலைமை வகித்தார். மீன்பிடி தொழிற்சங்க மாவட்டத் தலைவர் முனியாண்டி, பொருளாளர் செந்தில், தேவிபட்டினம் மீனவத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆதாம் மைதீன், அண்ணல் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்கக் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி பேசியதாவது:
பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு கடல் அட்டைகளைப் பிடிக்க தடை விதித்துள்ளது. ஒரு கடல் அட்டை வருடத்துக்கு 2 முறை 10 லட்சம் முட்டைகளை இடும். அந்த இனத்தை அழிந்து வரும் பட்டியலில் சேர்த்துள்ளது வேடிக்கையாக உள்ளது. அண்டை நாடான இலங்கை உள்ளிட்ட உலகில் எந்த நாட்டிலும் கடல் அட்டையை பிடிக்க தடை செய்யப்படவில்லை என்றார்.
ராமநாதபுரம் மாவட்ட சிஐடியு நிர்வாகிகள் சிவாஜி, ஜான் சவுந்தர்ராஜ் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.