Published : 05 Mar 2017 10:06 AM
Last Updated : 05 Mar 2017 10:06 AM

சென்னை கோபாலபுரம் பகுதியில் வங்கியில் நள்ளிரவு கொள்ளை முயற்சி: லாக்கர் உடையாததால் பல லட்சம் தப்பியது

சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையனை தேடும் பணி தீவிரம்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால், பல லட்சம் ரூபாய் தப்பியது. வங்கியின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன், கொள்ளையனை தேடும் பணியை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.

சென்னை கோபாலபுரம் லாயிட்ஸ் சாலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை உள்ளது. நேற்று முன்தினம் பணிகள் முடிந்த பிறகு, மாலையில் அலுவல கத்தைப் பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். இந்நிலையில், நள்ளிரவு 2.45 மணி அளவில் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையன் அடுத்தடுத்து போடப்பட்டு இருந்த 3 பூட்டுகளையும் லாவகமாக உடைத்து உள்ளே புகுந்தான். பின்னர், பணம் இருந்த லாக்கரை உடைத்துப் பார்த்துள்ளான். அவன் சிரமப்பட்டு போராடியும் லாக்கர் உடையவில்லை.

இதனால், எரிச்சல் அடைந்த கொள்ளையன், அங்கிருந்த படிவங்களை கிழித்து எறிந்தான். காசோலை போடும் பெட்டியில் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பினான். வங்கியின் முகப்பு வரை இந்த தீ பரவியதால், கரும் புகை கிளம்பியது. அந்தக் கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள் இதைப் பார்த்து, ராயப்பேட்டை போலீஸாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர்.

உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் சத்தியசீலன் மற்றும் போலீஸார் விரைந்து வந்தனர். தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்களும் வந்தனர். அதற்குள் தானாகவே தீ அணைந்துவிட்டது. தடயவியல் நிபுணர்களும் வந்து, கைரேகைகளை பதிவு செய்தனர்.

கொள்ளை முயற்சி குறித்து வங்கி மேலாளர் நிஷாந்தினி கொடுத்த புகாரின் பேரில், ராயப் பேட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வங்கியின் கண்காணிப்பு கேம ராவில் பதிவான காட்சிகள் உதவியுடன், கொள்ளையனை அடையாளம் காணும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

மீண்டும் நடமாட்டம்

சென்னை பெருங்குடியில் உள்ள பரோடா வங்கி கிளையில் 2012-ல் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து கீழ்க்கட்டளை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.14 லட்சம் கொள்ளையடித்தனர். இதையடுத்து, கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 5 பேரை அப்போதைய சென்னை காவல் ஆணையர் திரிபாதி தலைமையிலான போலீஸார் பிடிக்க முயன்றனர். இந்த மோதலில் 5 பேரும் உயிரிழந்தனர். அதன் பிறகு, வங்கி கொள்ளையர் நடமாட்டம் குறைந்தது.

திருவல்லிக்கேணியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 2013-ல் ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x