ஜிஎஸ்டி மசோதா சந்தேகத்தை மத்திய அரசு போக்க வேண்டும்: வாசன்

ஜிஎஸ்டி மசோதா சந்தேகத்தை மத்திய அரசு போக்க வேண்டும்: வாசன்
Updated on
1 min read

பொருளாதார நிபுணர்களுக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையிலும் ஜிஎஸ்டி மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜிஎஸ்டி - சரக்கு மற்றும் சேவை வரிக்கான திருத்தப்பட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள மத்திய கலால்வரி, சுங்க வரி, மத்திய விற்பனை வரி, மாநில வரிகள், கூடுதல் வரிகள், கொள்முதல் வரி, வாட்வரி, நுழைவு வரி, சேவை வரி, விளம்பர வரி, பொழுதுபோக்கு வரி, சொகுசு வரி போன்ற வரிகள் அனைத்தும் ஜிஎஸ்டி வரிக்குள் அடங்கும்.

மேலும், சரக்கு மற்றும் சேவை வரியானது எந்த சதவீத அளவுக்கு விதிக்கப்படும் என்ற சந்தேகம் இருக்கின்றது. வளர்ந்து வரும் நம் நாட்டில் - குறிப்பாக உற்பத்தி பொருட்களுக்கான வரி மற்றும் மாநில அரசின் வரியில் ஜிஎஸ்டியின் நேரடி தலையீடு என்பது நாட்டில் பணவீக்கத்தை அதிகப்படுத்தும். இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு அதன் அடிப்படையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரியினால் மாநிலங்களின் வரியில் தடை ஏற்பட்டு, மாநில உரிமைகள் பறிபோகி, கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படுமோ என்ற உணர்வு பல்வேறு மாநில அரசுகளின் மத்தியில் உள்ளது. அதனைப் போக்கும் வகையில் மத்திய அரசு மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என்று கூறியிருந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளுக்கும் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி - மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றும் போது அதனை ஆதரித்த பல்வேறு உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசுகள், பொருளாதார நிபுணர்களுக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையிலும் இந்த மசோதவை நடைமுறைப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in