

மேக் இன் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவின் உற்பத்தி 9.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் மண்டல பத்திரிகை ஆசிரியர்களுக்கான 2 நாள் மாநாடு சென்னையில் நடந்தது. நேற்று நடந்த 2-ம் நாள் நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 26 ஆயிரத்து 113 பில்லியன் அமெரிக்க டாலர். தேயிலை, புகையிலை, நறுமணப் பொருட்கள், செராமிக்ஸ், மருந்துப் பொருட்கள், கயிறு, கைவினை பொருட்கள் போன்றவற்றின் ஏற்றுமதி ஏறுமுகத்தில் உள்ளது. பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் அல்லாத பொருட்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இந்தியாவின் ஏற்றுமதி வீழ்ச்சி ஏப்ரலுக்கு பிறகு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேயிலை வருமானத்தை பெருக்க இம்மாத இறுதியில் சர்வதேச தேயிலை மாநாடு ஊட்டியில் நடத்தப்படும். ரப்பர் உற்பத்தியை பெருக்கி விரைவிலேயே அதன் இறக்குமதி நிறுத்தப்படும்.
தொழில்துறையை பொறுத்தவரை, மேக் இன் இந்தியா திட்டத் துக்கு பிறகு இந்தியாவின் உற்பத்தி 9.3 சதவீதமாகியுள்ளது. இது 2013-2014-ல் 5 சதவீதமாகவும், 2014-2015-ல் 5.5 சதவீதமாகவும் இருந்தது. உலக தொழில் முதலீட்டு அறிக்கையின்படி, பொரு ளாதார வளர்ச்சியில் முன்னேற்றமடைந்து வரும் நாடுகளுக் கான தரவரிசை பட்டியலில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது. இந் தியாவில் தொழில் தொடங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் தொடங்குவோர் உதவி மையத்தை ஜப்பான், கொரியா, இங்கிலாந்து நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ்குமார், ‘உச்ச நீதிமன்ற பரிந்துரைப்படி சேது சமுத்திரம் திட்டம் மாற்றுப்பாதையில் செயல்படுத்தப்படும். நாட்டில் துறைமுகங்களின் தேவை அதிகம் உள்ளது. எனவே, அருகருகே உள்ளதால் குளச்சல், விழிஞ்ஞம் துறைமுகப் பணிகளை கைவிட முடியாது’ என்றார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தலைவர் ராகவ் சந்திரா பேசும்போது, “சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலைப்பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன. இன்னும் 3 மாதங்களில் பணிகள் தொடங்கும்’ என்றார். நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் ஆனந்த் குமார், மத்திய பத்திரிகை தகவல் அலுவலக இயக்கு நர் ஃப்ராங் நொரோனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.