

சார்க் மாநாட்டில் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று மோடி வாழ்த்தியுள்ளது தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பது குறித்து முடிவு செய்ய டிசம்பர் 8-ம் தேதி கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா, ஈரோட்டில் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து செய்தி வெளியிடக் கூடாது என மத்திய அரசின் உளவுத்துறை மிரட்டுகிறது. இதை காரணம் காட்டி தமிழக அரசுக்கு ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால், அந்த அரசுக்கு நாங்கள் பக்க பலமாக இருப்போம். உடனே அதிமுகவுடன் வைகோ கூட்டணி சேருகிறார் என்று நாளை எழுதிவிடுவார்கள். கொஞ்ச நாள் முன்பு திமுகவுடன் கூட்டணி என்று எழுதினார்கள்.
ஈழம் மலர வேண்டும் என்று வாஜ்பாய் மனதார விரும்பினார். புலிகளுக்கு ஆயுதம் எடுத்து சென்ற கப்பலை இந்திய கடற்படை தடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். வாஜ்பாயின் அணுகுமுறை நரேந்திர மோடியிடம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சவை அழைத்ததன் மூலம் தலையில் கல்லை போட்டு விட்டார். சார்க் மாநாட்டில் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று மோடி வாழ்த்தியுள்ளது தாங்க முடியாத வேதனையை அளிக்கிறது. இலங்கையில் பெண்களை கற்பழித்த, குழந்தை களை கொலை செய்த, இந்து கோயில்களை இடித்த, தமிழர் களை கொன்றழித்ததற்காக வாழ்த்து சொன்னீர்களா? சார்க் நாட்டின் நேசம் வேண்டும் என்பதற்காக, இந்த நாட்டு மக்கள் மனதில் விஷம் விதைத்து எங்களை வேற்றுமைப்படுத்தி விடாதீர்கள்.
தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து ஒரு நாடகத்தை நடத்தியுள்ளார்கள். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கைக்கு கள்ளத்தனமாக உதவியது. தற்போதைய பிரதமர் உடலை முருக்கிக்கொண்டு, நேரடியாக முரட்டு அடி அடிக்கிறார். இதையெல்லாம் பேசினால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறீர்களா என கேட்கிறார்கள். கூட்டணியில் இருந்தால் தவறை தட்டிக் கேட்கக் கூடாதா? இது தொடர்பாக முடிவு செய்ய டிசம்பர் 8-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டவுள்ளோம்.
காவிரி பிரச்சினையில் தமிழக கட்சிகள் அரசியல் செய்ய வேண் டாம். இந்த விஷயத்தில் தமிழக அரசின் பின்னால் நிற்போம் என்றார்.