

திரைப்படத் துறையிலும் இந்தி மொழியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில மொழிகளில் வெளியிடப் படும் திரைப்படங்களின் உரையாடல்களை இந்தி எழுத்துக்களில் (சப்-டைட்டில்) தர வேண்டும் அல்லது இந்தியில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருப்பதாக முன்னணி செய்தி நிறுவனமான பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது,
இந்திய மொழிகள் அனைத்தை யும் சமமாக மதிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால், மாநில மொழிகள் என்ற அடிப்படையில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை இந்தி ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வர எடுக்கப்படும் முயற்சிகள் எதுவாயினும் அது இந்திய ஒருமைப்பாட்டையும் ஒற்றுமை யையும் சீர்குலைக்கும்.
சமஸ்கிருத திணிப்பு, இந்தித் திணிப்பு என மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக திரைப்படங்களையும் இலக்காக்குவது கண்டனத்துக் குரியது. திரைப்படத் துறையிலும் இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது.
இதுகுறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
எந்த வகையில் இந்தி ஆதிக்கம் செலுத்த நினைத்தாலும் அதை எதிர்த்து முறியடிக்க திராவிட அரசியல் பேரியக்கமான திமுக தயங்காது. இந்தி ஆதிக்கத்தை எதிர்க்க எத்தகைய போராட்டத்துக்கும் திமுக தயாராகவே உள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.