

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் நேற்று தேநீர் விருந்து அளித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக காங் கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
பின்னர் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த ராகுல் காந்தி, மாலை 4.35 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் உள்ளிட்டோர் வந்தனர்.
ஸ்டாலினும் அவரது குடும்பத் தினரும் ராகுலை வரவேற்றனர். அவருக்கு ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்தார். மாலை 5.07 மணி வரை சுமார் 30 நிமிடங்கள் ஸ்டாலினுடன் நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து ராகுல் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராகுல், ஸ்டாலின் இருவரும் ஒரே காரில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா நடைபெறும் ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்துக்கு வந்தனர்.
மதிய விருந்து
கருணாநிதி பிறந்த நாள் விழாவுக் காக சென்னை வந்துள்ள தேசியத் தலைவர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஸ்டாலின் நேற்று மதிய விருந்து அளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச்செய லாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். உடன் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.