Last Updated : 04 Dec, 2013 09:50 AM

 

Published : 04 Dec 2013 09:50 AM
Last Updated : 04 Dec 2013 09:50 AM

சென்னை: அம்மா உணவகத்தில் விரைவில் பயோ-கேஸ் உற்பத்தி நிலையம்

சென்னையில் உள்ள ஒரு அம்மா உண வகத்தில் சோதனை முறையில் பயோ-கேஸ் (இயற்கை எரிவாயு) உற்பத்தி நிலையத்தினை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தேனாம்பேட்டை கவிஞர் பாரதிதாசன் சாலையில் (கே.பி.சாலை) உள்ள அம்மா உணவகத்தில் இந்த பயோ-கேஸ் உற்பத்தி நிலையம் சில வாரங்களில் செயல்படவுள்ளது.

வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த அம்மா உணவகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, பயோ-கேஸ் உற்பத்தி நிலையத்தின் மூலம் எரிவாயுவாக மாற்றி உபயோகிக்கப்படும்.

இந்த உணவகம் அமைந்திருக்கும் 122-வது வார்டில் அமைந்திருக்கும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை வைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, அந்த வார்டில் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை அங்கேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கும் குப்பை நேரடியாக அம்மா உணவகத்துக்கு கொண்டுவரப்படும். பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பை மறுசுழற்சிக்கு அனுப்பப்படும்.

முதல் கட்டமாக, போட் கிளப் பகுதியில் ஏழு தெருக்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. 1,200 பேர் வசிக்கும் 300 வீடுகளிலிருந்து குப்பை பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. மக்காத குப்பைக்கு, நீல நிற குப்பைக் கூடையும், மக்கும் குப்பைக்கு பச்சை நிற குப்பைக் கூடையும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளுக்கு 1.5 டன் குப்பை சேருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் போக மீதம் உள்ள ஒரு டன் குப்பை அம்மா உணவகத்துக்கு அனுப்பப்படும்.

யூத் எக்ஸ்னோரா என்ற அமைப்புடன் இணைந்து இது செயல்படுத்தப்படுகிறது. இது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளாக கூறுகிறோம். ஆனால் முற்றாக ஒழிக்க முடியவில்லை. இது போன்ற அமைப்புகள் முன் வந்தால் மாநகராட்சி கண்டிப்பாக உதவும். இந்தத் திட்டம் மற்ற இடங்களிலும் அமலாக வேண்டும்’ என்றார்.

இதுபோல், ஹாரிங்டன் சாலையிலும் இத்திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளது. அங்கிருந்து சேகரிக்கப்படும் குப்பையை அருகில் உள்ள அரசு விடுதிகளிலோ, சத்துணவுக் கூடங்களிலோ அமைக்கப்படும் பயோ-கேஸ் உற்பத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.

யூத் எக்ஸ்னோராவை சேர்ந்த நிஷா கூறுகையில், ‘குப்பையை வீட்டிலேயே பிரிப்பது மிக அவசியம். இதைப் பற்றிய பயிற்சியை மாநகராட்சி மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கும், வீட்டு வேலை செய்பவர்களுக்கும் அளித்துள்ளோம். போட் கிளப் பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கம் ஆர்வமாக இருந்ததால் அங்கு தொடங்கியுள்ளோம். குடிசைப் பகுதிகளில், குறிப்பாக குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை அளிக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x