தொலைபேசி இணைப்பக வழக்கு: நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜர்- குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

தொலைபேசி இணைப்பக வழக்கு: நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் ஆஜர்- குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது
Updated on
1 min read

சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன், தனது வீடுகளில் சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்பகத்தை நடத்தியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் பொதுமேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், முன்னாள் துணைப் பொதுமேலாளர் எம்.பி.வேலுச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தங்கள் மீதான குற்றப்பத்திரிகையை ஏப்ரல் 1-ம் தேதி ஆஜராகி பெற்றுக்கொள்ளும்படி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏப்ரல் 1-ம் தேதி விடுமுறை தினம் என்பதால் மாறன் சகோதரர்கள் 3-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க சிபிஐ கால அவகாசம் கோரியது.

இந்நிலையில், குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கே.பிரம்மநாதன், எம்.பி.வேலுச்சாமி உள்ளிட்டோர் சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஜவஹர் முன்பு நேற்று ஆஜராகினர். அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக விசாரணையை ஜுலை 28-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in