

அதிமுக செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் இன்னோவா காரை கட்சியின் தலைமை அலுவலத்தில் ஒப்படைத்தார்.
இதனால் நாஞ்சில் சம்பத் அதிமுகவில் இருந்து விலகப் போகிறார் என்றும், சசிகலா தலைமையை நாஞ்சில் சம்பத் விரும்பவில்லை என்றும், விரைவில் திமுகவுக்கு செல்வதாகவும் கூறப்பட்டது.
இது குறித்த உண்மைத் தகவலை அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் நாஞ்சில் சம்பத்திடம் தொலைபேசியில் பேசினோம்.
அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக இயக்கத்தின் பிரச்சாரத்துக்காக கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த கார் இப்போதும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில்தான் உள்ளது.
அந்த காரை கட்சியின் பிரச்சாரம், கட்சிக் கூட்டத்துக்குத் தவிர என்னுடைய சொந்த உபயோகத்திற்காக ஒருநாள்கூட பயன்படுத்தவில்லை. கடந்த 8 மாதங்களாக பிரச்சாரம் இல்லை. இனி பிரச்சாரம் இருக்கவும் வாய்ப்பில்லை.
வீணாக அதை வைத்துக் கொண்டு எதற்கு இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமைக் கழகத்தில் ஒப்படைத்துவிட்டேன். மற்றபடி வேறு எந்தக் காரணமும் இல்லை'' என்றார்.