

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்த பாமக நிறுவனர் ராமதாசுக்கு பாராட்டு விழா பல்லாவரத்தில் நடைபெற்றது . இதில் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, கட்சித் தலைவர் ஜி.கே. மணி, வழக்கறிஞர் பாலு, ஏ.கே. மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
விவசாயிகள் பிரச்சினைக்கு திமுக, அதிமுக இரு கட்சிகளே காரணம். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து இல்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவித்துள்ளார். நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் நடை பெறுகிறது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வது குறித்து தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசித்து இது தொடர்பான சட்ட முன்வடிவைக் கொண்டு வர வேண்டும்.
மாநிலம் முழுவதும் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்க போலீஸ் துணையுடன் அரசு முயற்சி செய்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும். பொதுமக்கள் போராட்டத்தில் நானும் கலந்து கொள்வேன் என்றார்