Published : 20 Mar 2017 03:46 PM
Last Updated : 20 Mar 2017 03:46 PM

கச்சத்தீவு பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்: பேரவையில் ஸ்டாலின் கோரிக்கை

கச்சத்தீவு பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவை இன்று கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட மீனவ இளைஞர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது பேசிய ஸ்டாலின், 'இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராக இலங்கை செயல்படுகிறது. மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும்' என்றார்.

அப்போது பேசிய நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், 'கச்சத்தீவை 1974-ம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்த்தது யார்?' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், 'கச்சத்தீவு பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது அப்போதைய முதல்வர் கருணாநிதி அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதினார்' என்றார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், '1974-ம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்த பிறகு, ஏன் திமுக வழக்கு தொடரவில்லை? மறைந்த முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்' என்றும் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x