

தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று மத்திய பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட் குறித்த அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரின் கருத்துகள் வருமாறு:
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:
தமிழகம் பெருமளவில் புறக்கணிக்கப் பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ மனை, நதி நீர் இணைப்பு, மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்து ஒன்றுமே சொல்லப்படாதது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளக் கூடிய நிலை உருவாகியுள்ள சூழலில் அவர்களுடைய கடன்களைக் கூட தள்ளுபடி செய்யும் அறிவிப்பு இடம் பெறாதது வேதனையளிக்கிறது. அதே நேரத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிக மகளிரை ஈடுபடுத்துவது, கடந்த வருடத்தை விட 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அதிகம் ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், 50 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்துகளை வறுமைக்கோட்டுக்கு மேலே கொண்டு வருவதற்கான முயற்சியிலே ஈடுபட இருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:
டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பற்றி நிறைய கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதற்கான எந்த கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படாமல் இப்படி பேசுவது விந்தையாக இருக்கிறது. வறட்சி காரணமாகவும், கடன் தொல்லையாலும் நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனில் ரூ.70 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது. அதைப் போல, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது கண்டனத்துக்குரியது.
பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ்:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானவரி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. சேமிப் புத் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக் கான வரிச் சலுகைகள் மூலம் ஓரளவு வரிவிலக்கு கிடைக்கும் என்பதால் பெரும்பாலான மாத ஊதியதாரர்கள் ரூ.5 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியிருக்காது. வருமானவரி விலக்கு வரம்பு ரூ.4 லட்சமாகவோ, ரூ.5 லட்சமாகவோ உயர்த்தப்பட்டிருந்தால் பயனுள்ள தாக இருந்திருக்கும். நாடு முழுவதும் பயிர்க்கடனை திரும்பச் செலுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், அவர்களின் துயரங்களை தீர்க்க கடன் தள்ளுபடி அறிவிக்கப்படாதது சோகமே. ரயில்வே துறைக்கு ரூ.51,000 கோடி மட்டுமே அரசு உதவியாக வழங்கப்பட்டிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு:
ரூ.50 கோடி வரை விற்றுமுதல் கொண்ட சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரியை குறைக்கும் நடவடிக்கை பெரிய அளவில் வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும்.
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர், பழ.நெடுமாறன்:
தமிழகத்துக்குப் பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்துக்கான அறிவிப்பு எதுவும் வெளியாகாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:
கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கும் போக்குவரத்து வசதிகளைப் பெருக்குவதற்கும் முன்னுரிமை அளித்திருப்பதும் விவசாயிகளுக்கான கடன் ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தப் பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆனால், ரூ.5 லட்சம் வரையிலான வருமானம் உள்ளோருக்கு வரி விகிதம் 5 சதவீதமாக குறைக்கப் பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தாம்பரம் 3-வது ரயில் முனையம், ராயபுரம் ரயில் முனையம் ஆகியவற்றுக்கான நிதி குறித்த அறிவிப்பு இல்லாதது தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது.
இந்துஸ்தான் வர்த்தக சபை தலைவர் எம்.ரசாக்:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்திருப்பது சிறு தொழில்களை பெரிதும் ஊக்குவிக்கும். ரயில் கட்டணம் உயர்த்தப்படாதது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா:
வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த் தப்படாததால் வணிகர்களும், நடுத்தர மக்களும் பாதிக்கப் படுவர்.
மேலும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ், இந்திய தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் ஏ.சக்திவேல், தமிழ்நாடு சிறு குறுந்தொழில்கள் சங்க பொதுச்செயலாளர் சி.கே.மோகன், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.வி.கனகாம்பரம் உள்ளிட்டோரும் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.