Published : 01 Nov 2014 08:13 AM
Last Updated : 01 Nov 2014 08:13 AM

தமிழகத்தில் காமராஜர், மூப்பனாரை முன்னிறுத்தாமல் காங்கிரஸ் கட்சியை வளர்க்க முடியாது: மேலிடம் மீது ஞானதேசிகன் கடும் தாக்கு

தமிழகத்தில் காமராஜர், மூப்பனார் உள்ளிட்ட தலைவர்களை முன்னிறுத்தாமல் கட்சியை வளர்க்க முடியாது என்றும் இங்கே என்ன நிலைமை என்பது தெரியாமலேயே முடிவெடுக்கின்றனர் என்றும் காங்கிரஸ் மேலிடம் மீது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியி லிருந்து ராஜினாமா செய்த ஞான தேசிகன் சரமாரி புகார்களை கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த ஞானதேசிகன் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாள் நிகழ்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் தனது ராஜினாமா குறித்து நிருபர்களிடம் ஞானதேசிகன் கூறியதாவது:

மூப்பனாரால் அரசியல் முகவரி பெற்று மேல்சபை எம்.பி. ஆன நான், ஜி.கே.வாசனால் மீண்டும் மேல்சபை எம்.பி ஆனேன். எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் கடந்த 3 ஆண்டுகளாக கட்சியை நல்லமுறையில்தான் நடத்தினேன். ஆனால் கட்சியின் மேலிடம் மாநில தலைவர் பதவியை முக்கியமான தாக கருதவில்லை.

என்னதான் தேசிய தலைமை முக்கிய முடிவுகளை எடுத்தாலும், மாநிலத் தலைமையின் ஆலோச னைகளின்றி கட்சியை நல்லமுறை யில் வழிநடத்த முடியாது. இவற்றை யெல்லாம் நான் வெளியே சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த பதவிகளை நிரப்புவதற்காக ஓராண்டுக்கு மேல் போராடி புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அப்படி நியமிக்கப்பட்டவர்களில் பலர் சத்திய மூர்த்திபவனுக்கே வருவதில்லை. மேலிடத்திடம் இதுபற்றி கூறியபோதும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. கட்சிக்கு உழைப்பவர்களுக்கு பதவி வழங்கும் அதிகாரம் எனக்கு இல்லை.

மக்களவைத் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது முதல் நாள் வரை எனக்கு தெரியாது. மேலிடத்தில் கேட்ட போது ஒரு கட்சியை குறிப்பிட்டு அவர்களுடன் கூட்டணி என்றனர். ஆனால் அந்த கட்சி மறுநாள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறதே கூட்டணி எப்படி சாத்தியமாகும் என்றேன். இங்கு என்ன நிலைமை என்று தெரியாம லேயே எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு செய்கிறார்கள்.

மேலும் உறுப்பினர் சேர்க்கைக் காக 10 லட்சம் உறுப்பினர் அட்டை களை அச்சடித்தோம். இதுகுறித்து மேலிடத்திடமும் தெரியப்படுத் தப்பட்டது. இதையடுத்து என்னை தொடர்பு கொண்ட மேலிட பிரதிநிதி, உறுப்பினர் அட்டையை கொடுக்க வேண்டாம் என சிரித்துக் கொண்டே கூறினார். பரிசீலனை முடிந்து வேறு வடிவத்தில் அட்டையை கொடுக்கலாம் என்றனர். கட்சி உறுப்பினர்கள் அட்டையை சட்டைப்பையில் வைப்பதற்கே நினைக்கிறார்கள். தமிழகத் தில் கட்சிக்காக பாடுபட்ட காமராஜர், மூப்பனார் உள்ளிட்ட தலைவர்களை முன்னிறுத்தாமல் கட்சியை வளர்க்க முடியாது.

என்னை கேட்காமலேயே பொதுச் செயலாளரை நியமித்தனர். இதுதான் பிரச்சினைக்கான தொடக்கப்புள்ளி. அகில இந்திய தலைமையின் இந்த நடைமுறை மாறாவிட்டால் கட்சியின் எதிர்காலம் சிக்கலாக இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

கடந்த 3 மாதங்களாக ப.சிதம்பரம் சத்தியமூர்த்திபவனுக்கும் வரு வதில்லை. கட்சி கூட்டங்களுக்கும் வருவதில்லை. தனியாக ஆவர்த் தனம் செய்கிறார். சில கூட்டங்களை யும் தனியாக நடத்தியுள்ளார். இதைப்பற்றி யெல்லாம் கட்சி மேலிடம் அழைத்து எச்சரிக்கை செய்து இருந்தால் நன்றாக இருந்தி ருக்கும்.

நான் தலைவராக இருக்கும் போதே அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என்று விவாதித்த அநாகரீகத்தையும் சந்தித்தேன். டெல்லியில் கூட்டம் முடிந்ததும் அகமது படேலை சந்தித்து ஒரு கடிதத்தை கொடுத் தேன். நேற்று முழுவதும் யோசித்து இரவு 7 மணிக்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டேன். அதை ஏற்றுக் கொள்ளும் வரை தலைவராக நீடிக்கிறேன் என்றார்.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், இந்திரா காந்தியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x