

மத்திய அரசின் உதவி இல்லாமல் புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சி காண முடியாது என முதல்வர் நாராயணசாமி பேசியுள்ளார்.
புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் கலை, இலக்கிய திங்கள் விழாவின் தொடக்க விழா பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் நேற்று நடைபெற்றது. நாக.செங்கமலத்தாயார் வரவேற்றார். சட்டப்பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, கலைமாமணி மன்னர்மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, கலை, பண்பாட்டுத்துறை செயலர் பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறக்கட்டளை நிறுவனர் பாரதி நோக்கவுரை ஆற்றினார்.
முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கி பேசியதாவது:
பாரதிதாசன், பாரதியார், அரவிந்தர், காந்தி, நேரு, சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த மாதம் மற்றும் அன்னை புதுச்சேரிக்கு வந்த மாதங்களில் அவர்களின் பெயரில் கலை விழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் உள்ள நூல்களை கணினி மயமாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை அரசு முனைந்து செயல்படுத்தி, புத்தகங்களை பொக்கிஷமாக காக்கும். புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் அரசு மக்களுடைய நலனில் அக்கறை கொண்டுள்ளது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, சட்டம் ஒழுங்கு, வியாபாரிகள் பிரச்சினை, தொழில் ஆரம்பிப்பது, அரசு ஊழியர்கள் காலத்தோடு வேலைக்கு செல்வது, தரமான கல்வி, மருத்துவம் கொடுப்பது என அடிப்படை தேவைகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு செயல்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை மத்திய அரசின் உதவி இல்லாமல் மாநிலத்தில் வளர்ச்சி காண முடியாது. நம்முடைய வருமானத்தை வைத்து வளர்ச்சியை கொண்டுவர முடியாது. ஏனென்றால் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகள், கடமைகள் நிறைய உள்ளது.
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்கள், தொழிலா ளர்களுக்கு வருடத்துக்கு கொடுக்கப்படும் சம்பளம் ரூ.68 கோடி. ஒதுக்கப்படும் தொகையில் மீதியுள்ள 7 கோடியில் மருத்துவ உபகரணங்கள் வாங்க வேண்டும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாதல் மாநிலம் பின்நோக்கி சென்று விட்டது. இதை மாற்ற வேண்டும். மருத்துவ உபகரணங்கள், தரமான மருத்துவர்கள் நியமிக்க முக்கியத்துவம் தர வேண்டும்.
நஷ்டம் ஏற்படுகின்ற நிறுவனங்களுக்கு மானியம் கொடுத்ததால் மாநில நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பட்ஜெட் உரையில் வெளிப்படையாக பேசி யுள்ளேன்.
புதுச்சேரி அரசு பொது நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 13,500 பேருக்கு மானியமாக ரூ.656 கோடி கொடுத்துள்ளோம். இந்த நிதியை புதுச்சேரி மாநிலத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு, தரமான கல்வி, கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ வசதி அளிக்க நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்திருக்கும். ஆட்களை வேலைக்கு வைக்கலாம். ஆனால் தேவையுள்ள அளவு மட்டுமே வைக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
பழுதடைந்த வாகனத்தை எப்படி சரி செய்யனுமோ? அதுபோல ஒவ்வொரு பிரச்சினையையும் சரி செய்து வருகிறோம். எங்கள் ஆட்சிக்கு மக்கள் ஒட்டுமொத்தமாக ஆதரவு தருகிறார்கள். தொழிற் சாலை களை கொண்டு வருவார்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. அனைவரது ஒத்துழைப் பும் இருந்தால் பல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
சில தமிழறிஞர்கள், மொழி வல்லுனர்கள் வந்து தங்களுக்கு கலைமாமணி விருது தரவில்லை என்றாலும் கூட, நாங்கள் அவர்களை கண்டறிந்து விருதுகளை வழங்குவோம் என்றார்.
நஷ்டம் ஏற்படுகின்ற நிறுவனங்களுக்கு மானியம் கொடுத்ததால் மாநில நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பட்ஜெட் உரையில் வெளிப்படையாக பேசியுள்ளேன். பழுதடைந்த வாகனத்தை எப்படி சரி செய்யனுமோ? அதுபோல ஒவ்வொரு பிரச்சினையையும் சரி செய்து வருகிறோம்