

அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என திமுக உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் எச்சரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று வனம், சட்டம், நீதி, சிறைச்சாலைகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. இதில் பேசிய திமுக உறுப்பினர் எம்.திராவிடமணி (கூடலூர்), ஒரு பிரச்சினையை எழுப்பினார். அதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து உறுப்பினர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க பேரவைத் தலைவர் ப.தனபால் உத்தரவிட்டார். ‘திராவிட மணிக்கு போதுமான நேரம் ஒதுக்கப்பட்டு விட்டது. எனவே, அவர் அமர வேண்டும் எனக் கூறி அதிமுக உறுப்பினர் ஏ.ராமுவை (குன்னூர்) பேச அழைத்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். திமுக கொறடா அர.சக்கரபாணி எழுந்து, திராவிடமணிக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதை ஏற்காத பேரவைத் தலைவர், ‘‘அவருக்கு 20 நிமிடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர் 40 நிமிடங்களுக்குமேல் பேசிவிட்டார். குறுக்கீடுகளும் அதிகம் இல்லை. எனவே, இனியும் நேரம் ஒதுக்க முடியாது. பேரவையை நடத்த நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சிலர் உரத்த குரலில் கோஷமிட்டனர். அவர்களை அமைதிப்படுத்திய பேரவைத் தலைவர், ‘‘திமுக உறுப்பினர்கள் சிலர் விதிகளை மதிக்காமல் வேண்டுமென்றே கோஷமிடு கின்றனர். பேரவைத் தலைவர் உத்தரவை மதிக்காமல் அமளி யில் ஈடுபடுகின்றனர். நான் யாருக் கும் பயப்படவில்லை. இனியும் இதுபோல நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்தார்.