தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின்

தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின்
Updated on
2 min read

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக காவல்துறையில் உள்ள 19,157 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஆங்காங்கு நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் அனைத்துத் தரப்பு மக்களும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ரயில்வே நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், காவல் நிலையம் இருக்கும் இடங்கள் என்று எந்த இடமும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களாக மாறி வருவது வேதனைக்குரியது. குறிப்பாக சுவாதியின் படுகொலையில் இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் சென்னை மாநகரக் காவல்துறை திணறிக் கொண்டிருப்பது தமிழக காவல்துறையின் திறமைக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவாலாகவே இருக்கிறது.

மாநிலம் முழுவதும் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது. குற்ற வழக்குகளிலும் உரிய காலத்தில் விசாரணையை முடிக்க முடியாமல் காவல்துறை அதிகாரிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை மாநகரத்தில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த மென் பொறியாளர் சுவாதியின் படுகொலையும், தன்னைப் பற்றி இணைய தளத்தில் மார்பிங் செய்து வெளிவந்த படத்தை நீக்கக் கோரி கொடுத்த மனுமீது காவல்துறை அலட்சியம் காட்டியதால் சேலத்தில் இளம் பெண் வினுபிரியா தற்கொலை செய்து கொண்டதும் அடுத்தடுத்து அதிர்ச்சிச் சம்பவங்களாக மாறி, தமிழக காவல்துறை எந்த அளவிற்கு தவித்துக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

தமிழகத்தில் உள்ள 1808க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் மட்டுமின்றி சென்னை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த ஆள்பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். வீடுகளை பூட்டிவிட்டு வெளியில் கூட போய் வர முடியாத சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே ரவுடியிஸம் தலை தூக்கியிருக்கிறது. கூலிக்கு கொலை செய்யும் கலாச்சாரம் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் பங்கம் விளைவிக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல் தமிழக காவல்துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பது ஒரு காரணம் என்றால், காவல்துறையில் உள்ள பல்வேறு பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அதிமுக ஆட்சியில் வெகு காலமாக நிரப்பப்படாமல் இருப்பதும் இன்னொரு முக்கியக் காரணம் ஆகும்.

தமிழக மக்கள் தொகை 778 லட்சம் என்றால் காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட பலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 14 பேர் மட்டுமே! அதிலும் 19 ஆயிரத்து 157 பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே திருச்சி தங்கவேலு என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக காவல்துறையில் காலியாகக் கிடக்கும் இந்த 19 ஆயிரத்து 157க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வே தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தன என்றாலும், இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசின் ஆளுநர் உரையில் கூட காவல்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. காவல்துறையில் இயற்கையாக இப்படி ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள் இருந்தாலும், போலீஸ் பணி இல்லாத வேறு பணிகளில் ஆயிரக்கணக்கான காவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளதால் தமிழக காவல்துறையில் செயற்கையான ஆள் பற்றாக்குறையும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாதம் தோறும் தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் என்று பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் தொடர்ந்து ஓய்வு பெற்று வருகிறார்கள். ஆனால் அதற்குரிய புதிய நியமனமும் இல்லை. தலைமை காவலர் முதல் கூடுதல் டி.ஜி.பி. வரை உள்ள பல்வேறு பதவிகளில் இருப்போருக்கு வழக்கமாக கொடுக்கப்பட வேண்டிய பதவி உயர்வுகளும் இல்லை.

இப்படி அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறையின் செயல்பாடு அனைத்து விதத்திலும் முடங்கிப் போயிருக்கிறது. மாநிலத்தில் குற்றங்கள் பெருகுவதற்கு இது வழிவிடுவது மட்டுமின்றி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மிகவும் மோசமாக சீர்கெட வைத்துள்ளது. மக்கள் எப்போதும் ஒரு அச்ச உணர்வில் வாழும் ஆபத்தான சூழலை உருவாக்கியிருக்கிறது.

ஆகவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக காவல்துறையில் உள்ள 19, 157 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையில் நிலுவையில் உள்ள பல்வேறு பதவி உயர்வுகளையும் உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழக காவல்துறையில் திறமையான காவல்துறை அதிகாரிகளுக்கு பஞ்சமில்லை. அப்படி திறமைமிக்க அதிகாரிகளை முக்கியப் பணிகளில் நியமிப்பதிலும் அரசியல் செய்யாமல், அவர்களிடம் பொறுப்புக்களை அளித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட அதிமுக அரசு முன் வர வேண்டும்.

காவல்துறைக்கு ஆள் பற்றாக்குறை, வாகனப் பற்றாக்குறை போன்றவற்றை உடனடியாக நீக்கி, தமிழகத்தில் வேகமாக பெருகி வரும் குற்றச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in