Published : 16 Nov 2014 02:37 PM
Last Updated : 16 Nov 2014 02:37 PM

தொழில்நுட்ப கோளாறு: கூடங்குளத்தில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தள்ளிவைப்பு

கூடங்குளத்தில் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறனுள்ள முதலாவது அணு உலையில் வணிகரீதியில் மின் உற்பத்தி 2015 ஜனவரி 22-ல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வணிக ரீதியான மின் உற்பத்தியை ஏற்கெனவே திட்டமிட்டபடி துவக்க முடியவில்லை எனவும் அதற்கு பதிலாக 2015 ஜனவரி 22-ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டு பங்களிப்புடன், கூடங்குளத்தில் தலா 1000 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட அணு உலைகள் இரண்டு நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது அணு உலையில் இருந்து அக்டோபர் 22, 2014 முதல் வணிகரீதியில் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டப்பட்டிருந்தது. பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முதலாவது அணு உலையில் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்ட மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.22 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அன்று வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இது தொடர்பான அறிக்கை, மத்திய அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், டிசம்பர் 22-க்குள் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரிசெய்யப்படாததால், முதலாவது அணு உலையில் வணிகரீதியில் மின் உற்பத்தி 2015 ஜனவரி 22-ல் தொடங்கப்படும் என அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 10-ம் தேதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையின் பிளேடு, டர்பைன் போன்றவற்றை சீரமைக்க இன்னும் 8 வார காலம் தேவைப்படுவதால் வணிக ரீதியிலான உற்பத்தியை தொடங்கும் நாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x