

அதிமுக அரசு, பாஜகவுடன் இணக்க மாகச் செயல்படுவது, பல்வேறு பிரச்சினைகளிலும் மவுனமாக இருப்பது தமிழக மக்கள் நலனுக்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் கோவையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராஜன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு பிரகாஷ் காரத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நடப்பு நிதியாண்டின் 4-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 6.1 சதவீதமாக குறைந்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை, வளர்ச்சியைப் பாதித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. எனவே, பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தவறு என்று மோடி அரசு ஒப்புக்கொள்வதுடன், பொருளாதாரத்தை மீட்டெடுப்ப தற்கான நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
கால்நடைச் சந்தைகளில் பசு, காளை, ஒட்டகங்களை இறைச்சிக் காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போரை பெரிதும் பாதித்துள்ளது. கிராமப்புற பொரு ளாதாரத்தை சீர்குலைக்கும் இந்த நடவடிக்கை, மாநில உரிமையைத் தட்டிப்பறிக்கும் செயலாகும்.
வாழ்வாதாரத்துக்காக பசுக் களை வளர்க்கும் விவசாயிகள், அவற்றை விற்க முடியாமல் திண் டாடுவார்கள். ஏற்கெனவே வறட்சி யால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களை, இது மேலும் வேதனைப் படுத்தும்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பில், ஏற் கெனவே வரிவிலக்கு பெற்றுள்ள பல்வேறு பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது சிறிய தொழில்முனைவோர் மற்றும் உற்பத்தியாளர்களைப் பெரிதும் பாதிக்கும். நுகர்வோரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழல் முற்றி லும் மாறிவிட்டது. பாஜகவின் செயல்பாடு, கொள்கைகளுக்கு அதிமுக அரசு இணக்கமாக இருப்ப தும், பல்வேறு பிரச்சினைகளில் மவுனமாக இருப்பதும் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது. ஓ.பன்னீர்செல்வம் அணியும் பாஜகவுடன் இணக்கமாகவே இருக் கிறது. இதைப் பயன்படுத்தி, தமிழ கத்தில் மதச்சார்பு அரசியலை நுழைக்கப் பார்க்கும் பாஜகவின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக் கவை. கல்விக் கொள்கை, நிவா ரணத் தொகைகளை வழங்குவது என அனைத்திலும் தமிழகத்தின் நலன்களைப் புறக்கணிக்கிறது மத்திய அரசு என்றார்.
தமிழகம் முழுவதும் போராட்டம்
மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் கூறியதாவது: 3 ஆண்டு ஆட்சியில் அனைத்துத் துறைகளி லும் மத்திய அரசு தோல்வி அடைந் துள்ள நிலையில், இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகத்தை சந்தைகளில் விற்பதற்கும், வாங்கு வதற்கும் தடை விதித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல் வேறு கட்சியினருடனும் இணைந்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அடுத்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மத்திய அரசு தமிழகத்தை பல வழிகளில் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் மழை யின்மை, வறட்சி ஆகியவற்றால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளனர். மாநிலம் முழுவதும் கடும் குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது. பொருளாதார நெருக்கடியால் வேலையின்மை அதிகரித்துள்ளது. தமிழக அரசின் கடன் ரூ.3.14 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு என சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. ஆனால், இதுகுறித்து கவலைப்படாத தமிழக அரசு, டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிராகப் போராடுவோர் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்கிறது. அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதுடன், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றார்.