Published : 23 Jun 2016 09:29 AM
Last Updated : 23 Jun 2016 09:29 AM

4,455 மெகாவாட் புதிதாக சேர்க்கப்பட்டதால் தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது: மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தகவல்

தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரத்து 455 மெகாவாட் சேர்க்கப்பட்டதால், மின் மிகை மாநிலமாக உள்ளதாக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் வருமாறு:

கே.ஆர்.ராமசாமி (காங் கிரஸ்):

தமிழகம் மின் மிகை மாநிலம் என கூறப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை மெகாவாட் மின்சாரம் புதிதாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. எத்தனை விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுத்தீ்ர்கள் என்பதை விளக்க வேண்டும். பல ஆண்டுகளாக விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு காத்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மின் இணைப்பு மறுக்கப்படுகிறது.

அமைச்சர் பி.தங்கமணி:

கடந்த ஆட்சியில் கரண்டே இல்லை. கடந்த 2006-11ல் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தீர்கள்.

அப்போது திமுக உறுப் பினர்கள் எழுந்து ஆட்சேபம் தெரிவித்தனர்.

பேரவை தலைவர் பி.தனபால்:

ராமசாமி பேசியதற்கு அமைச்சர் பதிலளிக்கிறார். முதல்வரிசையில் இருக்கும் உங்கள் தலைவருக்கு மட்டும் அனுமதி தரமுடியும். எல்லோருக்கும் பேச அனுமதி தர முடியாது.

அமைச்சர் பி.தங்கமணி:

திமுக ஆட்சியில் 8 மணி நேரம் மின் வெட்டு என அறிவிக்கப்பட்டு 15,16 மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டிருந்தது.

அப்போது திமுக துணைத் தலைவர் துரைமுருகன் பேச அனுமதி கேட்டார்.

பேரவை தலைவர் தனபால்:

எல்லோரும் எழுந்து அனுமதி கேட்டால் எப்படி? அமைச்சர் பேசி முடித்ததும் அனுமதி தருகிறேன்.

பி.தங்கமணி:

கடந்த 2011-16ல் புதிதாக 4 ஆயிரத்து 455 மெகாவாட் சேர்க்கப்பட்டதால் தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது. இதை மத்திய அரசின் மின்துறை யும் உறுதிப்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளது. திமுக ஆட்சியில் மின் அமைச்சராக இருந்தவர், ‘எங்கள் ஆட்சி போனதற்கு மின்வெட்டுதான் காரணம்’ என கூறியிருந்தாரே?. விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடந்த போது, அவர்கள் தலைவர் சட்டப்பேரவையில்,‘ துப்பாக்கிகள் குண்டுமழை பொழியாமல், பூமழையாக பொழியும்’ என்று கூறினார்.

துரைமுருகன்:

விவசாயிகள் எத்தனை பேருக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளீர்கள் என கேட்டதற்கு துப்பாக்கி, குண்டு மழை என பேசுகிறார். நாங்களும், ‘போர்க்களம் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்?’ என்று பேசுவோம்.

ராமசாமி:

தமிழகத்தில் உற்பத்தி செய்ததை விட, தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறது. இதைகொண்டுதான் மின்மிகை மாநிலம் என கூறுகிறீர்களா?

பி.தங்கமணி:

வாங்கியதை சேர்க்காமல் புதிய மி்ன் உற்பத்தி வகையில், புனல் மின்சாரம் 107.5, அனல் மின்சாரம் 1800, மத்திய தொகுப்பில்தமிழகத்தின் உற்பத்தி 2,548, அணு மின் நிலையங்களில் தமிழக பங்கு 563 மெகாவாட் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் தனியாரிடம் இருந்து ரூ.13-க்கு மின்சாரம் வாங்கப்பட்டது. தற் போது காற்றாலையில் இருந்து மின்சாரம் கிடைப்பதால் ரூ.5-க்கே தனியாரிடம் இருந்து வாங்கப் படுகிறது.

ராமசாமி:

தனியாரிடம் இருந்து வாங்கப்படும் மின்சாரத்துக்காக என்ன விலை கொடுக்கிறீர்கள்?

பி.தங்கமணி:

தற்போது ரூ.5 கொடுத்து வாங்குகிறோம். மிகை மாநிலமாக இருப்பதால், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் கூட்டம் நடத்திய முதல்வர், 900 மெகாவாட் மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு விற்பதற்கு அனுமதி அளித்துள்ளார். தற்போது 87 ஆயிரத்து 882 விவசாயிகளுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ராமசாமி:

விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x