

உதகையில் முதல்வர் ஜெயலலிதா தங்கியுள்ள கொடநாடு பங்களாவை அதிமுகவினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த மாதம் கே.ஆர்.அர்ஜுனன் வசம் இருந்த நீலகிரி மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, பால நந்தகுமாரிடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பாலநந்தகுமாரிடம் இருந்து மாவட்டச் செயலாளர் உள்பட அனைத்துப் பொறுப்புகளும் 10 நாள்களில் பறிக்கப்பட்டன. இதையடுத்து குன்னூர் ஒன்றியச் செயலாளராக இருந்த பர்லியாறு ஊராட்சித் தலைவர் கலைச்செல்வன் புதிய மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். உதகை எம்.எல்.ஏ. புத்திசந்திரனுக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. ஒருமாத காலத்தில் நடைபெற்ற இந்த அதிரடி மாற்றங்களால் கட்சியினரிடையே குழப்பம் நிலவியது.
இந்நிலையில், குன்னூர் ஒன்றியச் செயலாளர் பதவி, குன்னூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஹேம்சந்த்துக்கும், புத்திசந்திரன் வகித்து வந்த குந்தா ஒன்றியச் செயலாளர் பதவி, உதகை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் மோகனுக்கும் வழங்கப்பட்டது. இது கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மோகன், ஹேம்சந்த் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் கட்சியில் சேர்ந்தனர். மூத்தவர்கள் கட்சியில் உள்ளபோது இவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.
கடந்த உள்ளாட்சி தேர்தலின்போதுதான் ஹேம்சந்த் தேமுதிக-விலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். இவர், மாவட்டச் செயலாளர் கலைச்செல்வனுக்கு நெருக்கமானவர் என்றும், மோகன், புத்திசந்திரனின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது. இதனால்தான் இவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கட்சினர் கூறிவந்தனர்.
கட்சியிலிருந்து நீக்கக்கோரி கோஷம்
கட்சியினரிடையே ஏற்பட்டு வந்த குழப்பம் வெள்ளிக்கிழமை தீவிரமடைந்தது. மேலூர் கிளைச் செயலாளர் காதர், விவேகானந்தன், உதகை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஷீலா ஆகியோர் தலைமையில், குந்தா ஒன்றியத்தைச் சேர்ந்த கட்சியினர் 250 பேர் முதல்வர் ஜெயலலிதா தங்கியுள்ள கொடநாட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றனர். பங்களாவை முற்றுகையிட்ட அவர்கள், உதகை எம்எல்ஏ புத்திசந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர் மோகனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கோரிக்கைகளை 5 பேருடன் சென்று முதல்வரின் உதவியாளரிடம் அளிக்க போலீஸார் அறிவுறுத்தினர். அதன்படி, கீழ்குந்தா பேரூராட்சி செயலாளர் காதர், விவேகானந்தன், உதகை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஷீலா ஆகியோர் புகார் மனுவை முதல்வரின் உதவியாளர் பூங்குன்றத்திடம் அளித்தனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், புத்திசந்திரன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது உறவினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிற கட்சியினருக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கினார். குன்னூர், குந்தா ஒன்றியச் செயலாளர் பதவிகள் புதியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தகுதி இல்லாதவர்களுக்கு பதவி வழங்கியுள்ளது கட்சியை பலவீனப்படுத்தும். இதுதொடர்பாக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.