

திருப்பூரில் டாஸ்மாக் மதுக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் போராட்டம் நடத்திய பெண்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்:
திருப்பூர் மாவட்டம் சாமளா புரத்தில் மதுக்கடை திறப்பதை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது காவல்துறையினர் ஈவு இரக்கமின்றி தடியடி நடத்தி யுள்ளனர். குறிப்பாக பெண்கள் மீது மனிதாபிமானமில்லாமல் தாக்குதல் நடத்தியதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
மாவட்ட கூடுதல் கண்காணிப் பாளர் பாண்டியராஜன் என்பவர் ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத் தில் அறைவது போன்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி மக்கள் மனதைப் பதற வைத்திருக்கிறது. இது பெண்களிடம் ஒருவித அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த சம்பவத்தால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.
படிப்படியாக மதுக்கடைகளை மூடுவோம் என்பதுதான் ஜெய லலிதா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி. தற்போது ஆட்சியில் இருப்போர் அதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலை வர் திருநாவுக்கரசர்:
திருப்பூரில் மதுக்கடை திறப்புக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய பெண்கள் மீதும் பொதுமக்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண் டிக்கிறேன். இத்தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் படுகாயம் அடைந்தவர் களுக்கு இழப்பீடு வழங்குவதோடு காவல்துறையினரால் கைது செய் யப்பட்டுள்ளவர்களை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்:
காவல் துறையினரின் இந்த மிருகத் தனமான செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மாநில அரசு காவல் துறை அதிகாரி பாண்டியராஜனை உடனடியாக பணிநீக்கம் செய்வ தோடு கைது செய்ய வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
மதுக்கடைக்கு எதிராக போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் மீதும், சாலை யில் சென்றவர்கள் மீதும் காவல் துறை தடியடி நடத்தியது மனிதாபி மானமற்ற செயல். இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன்:
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டிய நேரத்தில் புதிய மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதியில் அமைக்க முயற்சிக்கும் அரசையும், மகளிர் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத் திய காவல்துறையையும் காந்திய மக்கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது துறைரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்:
சாமளாபுரம் மக்களின் மண்டையை உடைத்தும், கையாலேயே மகளிரின் கன்னத்தில் அறைந்தும் மிருக வெறியாட்டம் ஆடிய காவல் அதிகாரியை மனித உரிமை மீறல் குற்ற வழக்கில் கைது செய்ய வேண்டும்.