

விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் நேற்று கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 6 மாதங்களாக நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் கூடுதல் பொறுப்புடன் கூடிய ஆளுநரை நியமித்ததே தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் அரசியல் சூழலுக்கு முக்கிய காரணம். நிரந்தர ஆளுநர் இருந்திருந்தால் அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு கிடைத்திருக்கும்.
மேலும், எம்எல்ஏக்களுக்கு தனித்தனி வாக்கெடுப்பு தேவையில்லை. மொத்தமாக அவர்களின் பெரும்பான்மையை தெரிவித்தாலே போதும். ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதால் எம்எல்ஏக்களுக்கு குதிரைபேரம் நடத்துவற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் எம்எல்ஏக்களின் இந்த பிரச்சினை காரணமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த முடியாமல் பணிகள் அனைத்தும் தாமதமாக நடந்து வருகிறது.
மார்ச் 10-ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அதி காரிகள் அரசியல் பிரச்சினை களால் குழம்பிப் போய் உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை கால நீட்டிப்பு செய்யாமல் ஜூன் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றார்.