Last Updated : 10 Oct, 2013 04:53 PM

 

Published : 10 Oct 2013 04:53 PM
Last Updated : 10 Oct 2013 04:53 PM

நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங் கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பது பற்றி அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சென்னையில் புதன்கிழமை ரகசிய ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு நிலைப்பாடு கொண்ட விவசாய சங்கங்கள் உள்பட அனைத்து விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

முக்கிய கோரிக்கைகள்

விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட், நதிகள் இணைப்பை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுதல், விவசாயிகளுக்கு தனிநபர் காப்பீடு போன்ற பயிர்க் காப்பீடு, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக் கும் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் மத்திய, மாநில அரசுகளால் நீண்டகாலமாக நிறைவேற்றப் படாமல் இருக்கின்றன.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் ஆகியவையும் தங்களுக்கு எதிராக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். 100 நாள் வேலைத் திட்டமும் விவசாயத்தைப் பாதிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், வரும் நாடாளு மன்றத் தேர்தலில் தங்களது முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளிக்கும் கட்சிக்கே வாக்களிப்பது என்று விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதற்கான செயல்திட்டத்தை வகுப்பதற்காக அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சென்னையில் புதன்கிழமை ரகசிய ஆலோசனை நடத்தினர்.

பேரணி, பொதுக்கூட்டம்

இந்தக் கூட்டத்தில், கட்சி சார்பற்ற முறையில் விவசாய சங்கங்களை ஒருங்கிணைப்பது, குறைந்தபட்சம் 10 பேர் கொண்ட குழுவை அமைப்பது, மாவட்ட அளவில் கூட்டங்களை நடத்துவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து வந்து, சென்னை அல்லது திருச்சியில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது, அதன்மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் குறிப்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்ப்பது என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

இடமும் தேதியும்

10 பேர் கொண்ட குழு, மாவட்டம் வாரியாக கூட்டம் நடத்தி பிறகு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வாக அறிவிக்கப்படும் என்று விவசாய சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் ஆகியவையும் தங்களுக்கு எதிராக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x